திருச்சி : சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தென்தமிழ்நாடு கிளை சார்பில் ஹரிவராசனம் பாடல் நுாற்றாண்டு விழா மாநாடு மற்றும் ரத யாத்திரை தொடக்க விழா ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்தது.
காலையில் ரதம் ஐயப்ப பிரதிஷ்டை மற்றும் பூஜை நடந்தது. தர்ம சாஸ்தா, மணிகண்டன் ரதங்களை ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா குழு தென் தமிழ்நாடு தலைவரும், தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியருமான முனைவர் ஆர்.ராமசுப்பு தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம், பந்தளம் அரண்மனை டிரஸ்ட் தலைவரும், பந்தளம் மன்னருமான ஸ்ரீமூலம் திருநாள் சசிக்குமார் வர்மா, சபரிமலை முன்னாள் மேல்சாந்தி கோசாலா விஷ்ணு வாசுதேவன் நம்பூதிரி, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், உலக ஹரிவராசன நுாற்றாண்டு விழா கமிட்டி புரவலர் விஜயராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் தொண்டைமான், கம்பன் கழகத் தலைவர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜிடிஎன் கல்வி குழுமம் சேர்மன் ரத்தினம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நகரின் முக்கியவீதிகளில் ரதம் சென்று மாநாட்டு மண்டபத்தை அடைந்தது.
பின்னர், கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. சமாஜ கொடியை ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் ஏற்றி வைத்தார்.
மாநாட்டுக்கு தலைமை வகித்த ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா குழு தலைவரும், 'தினமலர்' திருச்சி பதிப்பு ஆசிரியருமான முனைவர் ஆர்.ராமசுப்பு பேசியதாவது:
ஐயப்பனுக்கு சேவையாற்றும் இவ்வாய்ப்பின் மூலம் இந்த ஜென்மத்தின் பிறவிப்பயனை அடைந்துள்ளேன். 22 ஆண்டுகளுக்கு முன், 23 கன்னிசாமிகளுடன் சபரிமலைக்கு யாத்திரை அழைத்துச் சென்றபோது இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்காத ஆச்சரியம், ஐயப்பன் அருளால் நடந்துள்ளது.
அவருக்கு சேவை செய்ய என்னை தேர்வு செய்தததற்கு நானும், என் தாய் தந்தையும் என்ன புண்ணியம் செய்தோமோ என்று தெரியவில்லை.
இந்த வாய்ப்பை வழங்கிய சபரிமலை சேவா சமாஜத்தின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
நான் செய்தது ஒரு அணில் போன்ற உதவிதான். இன்னும் செய்வதற்கு நிறைய உள்ளது. ஐயப்பனுக்கான சேவை இன்னும் வலுப்பெற வேண்டும்.
அதற்கான கடமைகளை உங்கள் மூலமாக செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு முனைவர் ஆர்.ராமசுப்பு பேசினார்.
தருமபுரம் ஆதீனம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!