மீஞ்சூர் துணை நகர திட்டத்தில் 12 கிராமங்கள் இணைப்பு!

சென்னையில் வீடு, மனை தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சென்னை பெருநகருக்காக, 2008ல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது முழுமை திட்டத்தில் இதற்கான பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
ஆனால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இதுநாள் வரை அலட்சியமாக இருந்தனர். தற்போது, புதிய துணை நகரங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகளை துவக்கி உள்ளனர்.
தமிழக அரசின் அறிவுறுத்தல் அடிப்படையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர் ஆகிய ஐந்து இடங்களில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக புதுநகர் வளர்ச்சி திட்டங்களை உருவாக்க, தமிழக அரசு அனுமதி அளித்தள்ளது. புதுநகர் வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பதற்கான புதிய விதிமுறைகளை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவித்து உள்ளது.
இதன் அடிப்படையில் எந்தெந்த துணை நகரில் எந்தெந்த பகுதிகள் இணைய வேண்டும் என்பது தொடர்பான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சி.எம்.டி.ஏ., தயாரித்துள்ள வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:
சென்னையின் வடக்கில் மிக பெரிய அளவில் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ள பகுதியாக மீஞ்சூர் அமைந்துள்ளது.
இங்கு, மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள, 12 கிராமங்களுக்கு உட்பட்ட, 111.62 சதுர கி.மீ., துணை நகரின் பரப்பளவாக இருக்கும்.வெளிவட்ட சாலை, எண்ணுார், கும்மிடிப்பூண்டி வழித்தடம், திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி வழித்தடம் இதன் பிரதான பகுதிகளாக இருக்கும்.
எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகங்கள் இதில் அடங்கி இருக்கும். இப்பகுதிக்கான புதுநகர் வளர்ச்சி திட்ட தயாரிப்பு பணிகள் விரைவில் துவங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வசதிகள் மேம்படும்
மீஞ்சூரை சுற்றியுள்ள கிராமங்கள், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. சென்னைக்கு மிக அருகாமையில் இருந்தும் வளர்ச்சியடையவில்லை. தற்போது 'சாட்டிலைட்' நகரமாக மாற்ற திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் சாலை, தெருவிளக்கு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து என, கிராம மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படும். சென்னை மாநகராட்சியுடன் இணையும் வாய்ப்பும் உருவாகும். அதன் வாயிலாக, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் உருவாகும். இது அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஆர்.ஸ்ரீதர், 54, நந்தியம்பாக்கம்.
பாதிப்பு இருக்கக் கூடாது
மீஞ்சூரை சுற்றியுள்ள அனல் மின் நிலையம், சிமென்ட் தொழிற்சாலை, நிலக்கரி கையாளும் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களால், சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. 'சாட்டிலைட் நகரம்' என்ற பெயரில் தொழிற்சாலைகள் உருவாகுமானால், மாசு மேலும் அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஏற்கனவே, பொன்னேரியை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. பின், அது கிடப்பில் போடப்பட்டது. அதுபோன்று இல்லாமல், திட்டம் அமைய வேண்டும்.
டி.ஷேக் அகமது, 57, செயலர், மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நல கூட்டமைப்பு
வாசகர் கருத்து (7)
கூகுளேமேப்பில் மீஞ்சூர் என போட்டால் சாலை வசதி எப்படின்னு தெளிவா தெரியுது நூறு மீட்டரில் தண்டவாளத்தை தாண்ட முடியாமல் ஐந்தாறு கிலோமீட்டர் சுற்றுகிறோம் இப்படியிருந்தால் அந்த பகுதி வளர்வதெப்படி? இங்கே ஒருத்தர் அதற்குள் தமிழ்நாட்டிலேயே அங்கேதான் விவசாயம்னு ஆரம்பிச்சுட்டார் தமிழ் ஊடகங்கள் மவுண்ட் ரோடு மைலாப்பூர் பெசன்ட் நகரை தாண்டாது நமக்கு திருவொற்றியூர் வடிவுடையம்மனை தரிசிக்க போக இன்னமும் தயக்கம்தான் காரணம் சாலை வசதிதான் என்ன செய்ய
தெலுங்கர்கள் ஆட்சியில் ஆந்திரா பக்கமாகத் தான் திட்டங்களை போடுவார்கள். பரந்தூர், இப்போது மீஞ்சூர், பிறகு கும்முடிப்பூண்டி என ஆந்திர மக்களுக்கு சேவை செய்வார்கள். தென்மாவட்ட மக்கள் எந்த பக்கம் புழங்குகிறார்கள் என்கிற விஷயமே இந்த தெலுங்கு கட்சிக்கு தெரியாது.
திருமழிசை துணைநகரமே கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு காணோம். இதில் மீஞ்சூர் மிஞ்ச விட்டு விடுவார்களா ? எல்லாம் மூனு " சி " எங்கு விரைவில் அவதாரம் எடுக்குதோ அங்கே அமைய வாய்ப்பு உள்ளது. அப்புறம் " கிரேட்டர் சென்னை " அரக்கோணத்துக்கு அப்பாலும் போய் விடக் கூடாது.
இதிலே கொஞ்சம் கொஞ்சம் விவசாயம் நடக்குது. இனிமேல் அதுவும் ஒழிந்து போகும்.
மணாலி ஆயில் சுத்திகரிப்பு அலை தொடன் கும் போது மீஞ்சூரில் அங்கு வேலை செய்யும் அதிகாரி முதல் தொழிலாளி வரை எல்லோருக்கும் வீட்டி வசதி, மற்ற தேவையான வசதிகள் செய்ய திட்டம் இருந்தது. அதை அப்போதைய மத்திய அரசும் அலைஇல் உள்ள அதிகாரிகளும் கிடப்பில் போட்டனர். அதை செய்திருந்தால் அந்த இடம் இப்போது தென் சென்னைவிட நன்றாக வளர்ந்திருக்கும்.