தினமும் கனவில் வந்த கட்டுவிரியன் பாம்பு; கட்டுக்கதையால் விவசாயி நிலை பரிதாபம்
ஈரோடு, மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவ இயக்குனர் டாக்டர் செந்தில்குமரன், கூறியதாவது: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஒரு விவசாயிக்கு சில நாட்களாக, அவரது காலை பாம்பு சுற்றுவது போல கனவு வந்தது. இதை ஒரு ஜோதிடரிடம் கூறினார். அருகே உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல ஜோதிடர் பரிந்துரைத்தார். அக்கோவில் சென்று, பூசாரியிடம் விபரத்தை விவசாயி கூறினார். கனவில் வந்தது கண்ணாடி விரியன் பாம்பாக இருக்கும் எனக்கூறி, அதற்கு நாகசாந்தி பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது.
கடந்த வாரம் ஒரு பாம்பை பிடித்து வந்து பூஜை செய்தனர். பூஜை நிறைவில் பாம்பை பூசாரி பிடித்து கொள்ள, பாம்பின் முகத்தில் அந்த விவசாயியை, மூன்று முறை ஊதும்படி பூசாரி கூறியுள்ளார். மூன்றாவது முறை விவசாயி ஊதியபோது, அவரது நாக்கில் பாம்பு கொத்தி விட்டது. பாம்பு கொத்திய இடத்தில், பூசாரி கத்தியால் கீறி விட்டதால், சிறிது நேரத்தில் விவசாயி மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு, எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்தபோது, அவரது நாக்கு, முக்கால் அளவுக்கு வெட்டப்பட்டு, ரத்த குழாய் துண்டிக்கப்பட்டிருந்தது; அவரது உடலில் விஷம் பரவி இருந்தது. அவரால் சுவாசிக்க முடியவில்லை; சுயநினைவை இழந்தார். மூக்கு வழியாக செயற்கை சுவாசம் வழங்கி, அறுவை சிகிச்சை செய்து, ரத்த கசிவை நிறுத்தி, வெட்டப்பட்ட நாக்கை ஒட்டி வைத்தோம்.
இதன் பின், ஏழு நாட்களில் நினைவு திரும்பினார். தற்போது, அவர் பழைய நிலைக்கு திரும்பிவிட்டார். அவரால் பேச முடிகிறது; பதட்டமாக மட்டும் உள்ளார். எனவே, விஞ்ஞான பூர்வமில்லாத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். பாம்பு போன்றவை கடித்தால், உரிய மருத்துவ சிகிச்சை பெறுங்கள். இந்த சிகிச்சையில் டாக்டர்கள் ஆர்த்தி செந்தில், மாசிலாமணி, கனிஷ்கார்த்திக், நம்பி ஆகியோர் இணைந்து செயல்பட்டு, அவரை காப்பாற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!