மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க அவகாசம் தேவை!
ஈரோடு: 'மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, கூடுதலான அவகாசம் வழங்க வேண்டும்' என, விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், தமிழக முதல்வர், மின் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:
மின்வாரியம் மூலம் ஒவ்வொரு மின் இணைப்புதாரருக்கும் குறுந்தகவல் மூலம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தப்படுகிறது. வீடு, விசைத்தறி போன்றவைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்துள்ளவர்களுக்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால், இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என்ற அச்சம் உள்ளது.
ஆதார் எண்ணை இணைத்த பின் தான், மின் கட்டணம் செலுத்த முடியும் என்றவாறு இணைய தளத்தை மாற்றி அமைத்துள்ளனர். மின் கட்டண உயர்வு ஏற்படும்போது, விவசாயத்துக்கான இலவச மின் இணைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், பிற மின் இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அத்துடன், விவசாய மின் இணைப்பில், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதுபோல, விசைத்தறி கூடங்கள், தறிகளைக்கூட வாடகைக்கும், குத்தகைக்கு எடுத்தும் பலர் செயல்படுத்துகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இந்நிலைமை அதிகமாக உள்ளது. விசைத்தறிக்கு, 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பை, ஒருவர் வைத்திருந்தாலும், அதை வெவ்வேறான நபர் விசைத்தறி கூடம் அமைத்து பயன்படுத்துவதை அரசு உணர வேண்டும்.
அரசின் சத்துணவு திட்டம், இலவச சீருடை, புத்தகம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும், இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கும் விசைத்தறி பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஆதார் இணைப்பால், விசைத்தறியாளர்களுக்கான பலன் நின்றுவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
அதுபோல, வங்கி கணக்கு எண்ணுடன், ஆதார் இணைப்புக்கு ஒரு ஆண்டுக்கு மேலாக அவகாசம் வழங்கப்பட்டு முழுமை பெற்றது. இன்னும் கூட பலர் இணைக்காமல் உள்ளனர். எனவே, அதுபோல, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க உடனடி நடவடிக்கையை கைவிட்டு, சில மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!