dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில் கரூர்

சாலைப்புதுாரில்
ரூ.19 லட்சத்துக்கு வேளாண்

பொருட்கள் விற்பனை
கரூர், அக். 7-
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே, சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், கொப்பரை மற்றும் நிலக்கடலை, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு, கரூர், க.பரமத்தி ஒன்றிய விவசாயிகள், தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில், 40.52 குவிண்டால் எடை கொண்ட 10 ஆயிரத்து 750 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில், கிலோ அதிகபட்சமாக 22.50 -ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 17.75 ரூபாய்-க்கும், சராசரியாக 21.65- ரூபாய்க்கும் என மொத்தம், 82 ஆயிரத்து, 514- ரூபாய்க்கு விற்பனையானது. 263 குவிண்டால் எடையுள்ள, 565 மூட்டை கொப்பரை விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ, அதிகபட்சமாக, 78.89 ரூபாய்-க்கும், குறைந்தபட்சமாக 72.09 ரூபாய்-க்கும், சராசரியாக, 77.79 ரூபாய்-க்கும் விற்பனையானது.
இரண்டாம் தர கொப்பரை, கிலோ அதிகபட்சமாக, 73.29 ரூபாய்-க்கும், குறைந்தபட்சமாக, 61.89 ரூபாய்-க்கும், சராசரியாக, 70.06 ரூபாய்-க்கும் என மொத்தம், 18 லட்சத்து 28 ஆயிரத்து 521- ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வார ஏலத்தில், வேளாண் பொருட்கள் மொத்தம், 19 லட்சத்து 11 ஆயிரத்து, 42 ரூபாய்-க்கு விற்பனையானது.

கரூர் சர்ச் கார்னரில்
சிதிலமடைந்த
பயணிகள் நிழற்கூடம்
கரூர், அக். 7-
கரூர், சர்ச் கார்னர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் நகரின் முக்கிய பகுதி என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பஸ் மூலம் பொதுமக்கள் வேலை நிமித்தமாக இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக வாங்கல், நெரூர், மண்மங்கலம், வாங்கப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும், சர்ச் கார்னர் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள பயணிகள் நிழற்கூடத்தின் உட்புறமும், மேற்புற பகுதிகளும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மழைக்காலங்களில் ஒதுங்க கூட முடியாத அளவுக்கு நிழற்கூடம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த நிழற்கூடத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குளித்தலையில் ஹிந்து
பண்பாட்டு பயிற்சி முகாம்
குளித்தலை, அக். 7-
குளித்தலை எம்.பி.எஸ்., அக்ரஹாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில், தர்ம ஜாக்ரன் மற்றும் இந்து தர்ம பாதுகாப்பு குழுவின் பண்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு காவிரி படுகை விவசாய கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். தர்ம ஜாக்ரன் இந்து தர்ம பாதுகாப்பு குழு மாநில பொறுப்பாளர் பரமேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
'ஹிந்து எழுச்சியும் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் பொன் சபாபதி, 'தேச ஒற்றுமையும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் கரூர் மதுக்குமார், 'ஹிந்து தர்மமும் சமுதாய ஒற்றுமையும்' என்ற தலைப்பில் இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தாறுமாறாக செல்லும்
லாரிகளால் விபத்து அபாயம்
க.பரமத்தி, அக். 7-
கரூர் மாவட்டத்தில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான கனரக லாரிகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கின்றன. இதேபோல, க.பரமத்தி சுற்று வட்டார பகுதியில் இருந்து கிரஷர் லாரிகள், கரூர் - கோவை நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன. விஸ்வநாதபுரி, ரங்கநாதபுரம், க.பரமத்தி, வைரமடை ஆகிய இடங்களில் நெடுஞ்சாலையை ஒட்டி, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு லாரி டிரைவர்கள், மது அருந்தி விட்டு, லாரிகளை தாறுமாறாக ஓட்டுகின்றனர். இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, போதையில் லாரிகளை ஓட்டும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலத்தில் மணல் குவியலால்
வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர், அக். 7-
கரூர் அருகே, வாங்கல் - மோகனுார் காவிரி ஆற்று பாலம் உள்ளது. இந்த வழியாக கரூர், நாமக்கல் மாவட்டத்துக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், காற்றின் காரணமாக, பாலத்தின் சாலையோரத்தில் மணல் குவிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அகற்றப்படாத நிலையில் மணல் பரப்புகள் அதிகமாக பரவிக் கிடக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மணலில் சறுக்கி விழுந்து, காயமடைகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை
அதிகாரிகள், பாலத்தின் சாலையோரத்தில் குவிந்துள்ள மணலை
அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலையில் குப்பை எரிப்பு
புகை மூட்டத்தால் மக்கள் அவதி
கரூர், அக். 7-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருக்காம்புலியூர், ஆண்டாங்கோவில் பகுதிகளில் போதுமான குப்பைத்தொட்டி வைக்கப்படவில்லை. இதனால் நெடுஞ்சாலையோரம் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. அதனை அகற்ற சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகங்கள் உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உணவகங்கள், கடைகள் பெருகி வருகின்றன. இங்குள்ள குப்பைகளும் அருகில் உள்ள காலியிடங்களில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால்
ஏற்படும் புகைமூட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நெடுஞ்
சாலையில் வாகனங்களில் ‍செல்பவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அம்மன்
கோவில்களில்
சிறப்பு வழிபாடு
கரூர், அக். 7-
கரூர், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன்தினம் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் நஞ்சை புகழூர், குந்தாணிபாளையம், நத்தமேடு, புன்னம் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
போனஸ் வழங்க கோரி சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
கரூர், அக். 7-
கரூர், வெண்ணைமலையில், தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, சி.ஐ.டி.யூ., மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வெண்ணைமலையில் உள்ள மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். மணல், சிமென்ட், கம்பி, ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் நலன்களுக்கு மட்டும் கட்டுமான நல வாரியத்தில் உள்ள அனைத்து நிதிகளையும் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை தலைவர் கந்தசாமி, சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் தண்டபானி உள்பட பலர் பங்கேற்றனர்.
நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
கரூர், அக். 7-
கரூர் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய அட்டை கோருதல், மொபைல் எண் பதிவு, பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த, பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நாளை (8ம் தேதி) காலை 10:00 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து, பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கள்ளப்பள்ளி பஞ்.,ல்
குப்பை அகற்ற கோரிக்கை
கிருஷ்ணராயபுரம், அக். 7 -
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து பகுதியில் குப்பையை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு பஸ் ஸ்டாப், கருப்பத்துார் சாலை ஆகிய இடங்களில் குப்பை கொட்டப்பட்டுள்ளன. ஆனால், இவை முறையாக அப்புறப்படுத்தப்படாததால், அதிக அளவில் ‍தேங்கி, காற்றில் பறந்து வருகின்றன.
மேலும், அருகில் உள்ள விளை நிலங்களுக்கும் பிளாஸ்டிக் குப்பை செல்வதால் விவசாயமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம், குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருவ மழை முன்னெச்சரிக்கை
ஆலோசனை கூட்டம்
குளித்தலை, அக். 7-
குளித்தலை தாசில்தார் அ-லுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் 1:00 மணியளவில் நடந்தது.
தாசில்தார் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் முனிராஜ், பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தல், மழையினால் ஏற்படும் பாதிப்புகள், விஷ ஜந்துக்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பேசினார். இக்கூட்டத்தில், நங்கவரம், குளித்தலை, தோகைமலை குறுவட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த 9 கிராம முதல் தகவல் அளிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆர்.ஐ.க்கள், வி.ஏ.ஓ.,க்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
மைதானத்தில் கட்டட கழிவுகள்
நடைபயிற்சி செல்வோர் பாதிப்பு
கரூர், அக். 7-
கரூர், திருவள்ளுவர் மைதானத்தில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதால், நடைபயிற்சி மேற்கொள்வோர், விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கரூர், பஸ் ஸ்டாண்ட் அருகில் திருவள்ளுவர் மைதானத்தில், ஆண்டுதோறும் கூடைப்பந்து உட்பட பல்வேறு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தினமும் நுாற்றுக்கணக்கான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கூடைப்பந்து பயிற்சி மேற்கொண்டு
வருகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் இந்த மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மைதான பகுதியில் சுற்றுச்சுவரை ஒட்டி, கட்டட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும், விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுபவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, திருவள்ளுவர் மைதானத்தில் கட்டட கழிவுகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்
துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கரூர், அக். 7-
கரூர்-, வெங்கமேட்டில், சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கரூர்,- வெங்கமேடு, எஸ்.பி., காலனியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில், போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இருக்கும் கால்வாய் கூட பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்யாமல் அலட்சியமாக உள்ளது.
இந்நிலையில், எஸ்.பி., காலனியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது பல்வேறு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், இதுபோன்ற சுகாதார கேட்டால், பொதுமக்கள் நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். எனவே, கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement