பள்ளி மாணவி கொலை: வாலிபருக்கு ஆயுள் உறுதி
திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை, அவரது உறவினர் ஜெயராமன் என்பவர் காதலித்துள்ளார். மாணவியின் வீட்டுக்கு வந்த ஜெயராமன், பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார்.அதற்கு, படிப்பை முடித்த உடன் தான், திருமணம் பற்றி யோசிக்க முடியும் என மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.உறவினர் என்பதால், காபி கொடுப்பதற்காக பால் வாங்க, அருகில் உள்ள கடைக்கு மாணவியின் தாய் சென்று வீடு திரும்பினார். அப்போது, 'எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக் கூடாது' எனக்கூறி, மாணவியை கத்தியால் ஜெயராமன் குத்தியுள்ளார்; கழுத்தையும் அறுத்துள்ளார்.
இதைப் பார்த்த தாய் அலறினார். சம்பவ இடத்திலேயே மாணவி இறந்தார். இந்த சம்பவம் 2014 மார்ச்சில் நடந்தது. தப்பி ஓடிய ஜெயராமன், பின் கைது செய்யப்பட்டார்.வழக்கை விசாரித்த, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம், ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2018 டிசம்பரில் தீர்ப்பு அளித்தது. தண்டனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.மனுவை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும், அதனால், வெட்டு காயங்களை ஏற்படுத்தியதாகவும், ஜெயராமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க முடியாது. ஏனென்றால், 17 வயது சிறுமியின் உடலில், 32 வெட்டு காயங்கள் இருந்தன.இந்த அளவுக்கு ஜெயராமன் செல்வார் என்பதை, மாணவியின் பெற்றோர் நினைக்கவில்லை. அதனால் தான், காபி தயாரிக்க பால் வாங்க சென்றுள்ளார்.சாட்சியங்களை மறுக்க எந்த காரணங்களும் இல்லை. எனவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!