Advertisement

டியூகாஸ் உரிமம் ரத்து; கலப்பு உரத்துக்கு தட்டுப்பாடு!

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

கோவை 'டியூகாஸ்' உர உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும், 500க்கும் மேற்பட்ட வேளாண் சங்கங்களில், கலப்பு உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.



துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம்(டியூகாஸ்), தமிழகத்தில் ஒரு முன் மாதிரி சங்கமாக நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. வெவ்வேறு விதமான உரங்களைக் கலந்து, இந்த சொசைட்டியின் சார்பில் தயாரிக்கப்படும் அசோகா கலப்பு உரம், தமிழகத்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்களால் வாங்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றன.

விலை குறைவு



தரமாகவும், விலை குறைவாகவும் இருப்பதால், இக்கலப்பு உரத்துக்கு விவசாயிகளிடம் பெரிதும் வரவேற்பு உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும், ஆண்டுக்கு, 2,000 டன் அளவுக்கு விற்பனையாகிறது. ஆண்டுக்கு, 20 ஆயிரம் டன் கலப்பு உரம் தயாரிக்கும் அளவுக்கு சொசைட்டிக்கு உற்பத்தித்திறன் இருப்பினும், வேளாண் பல்கலை, வேளாண் துறை பரிந்துரைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் லைசென்ஸ் அடிப்படையில் உற்பத்தி நடக்கிறது.

தேவை அதிகம்



கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர், இதற்கான இலக்கை நிர்ணயம் செய்கிறார். தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து, விவசாயத்துக்கான பயிர்க்கடன்களும் வழங்கப்படுகின்றன. வழக்கமாக, அக்., துவங்கி ஜன., வரையிலும் பயிர்க்கடன் பெறுவதும், பயிர்களுக்கான இடுபொருட்கள் கொள்முதல் செய்வதும் தீவிரமாக நடக்கும். இந்த காலகட்டத்தில், டியூகாஸ் நிறுவனத்தின் கலப்பு உரத்துக்கு தேவை அதிகமாக இருக்கும்.

உரிமம் ரத்து



இப்போது, டியூகாஸ் நிறுவனத்தின் உர உரிமம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், கலப்பு உரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் மத்திய அரசின் உரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இந்த சொசைட்டிக்கான ஒதுக்கீட்டு அளவை விட, கூடுதலாகக் கொள்முதல் செய்ததன் காரணமாக, உர உரிமத்தை ரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முயற்சி இல்லை



மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இந்த உரிமத்தை திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்ததாக தெரியவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் இந்த சொசைட்டியில் கலப்பு உரம் வாங்கி வந்த, 500க்கும் மேற்பட்ட சொசைட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 8,000 டன் அளவுக்கு கலப்பு உரம் வாங்கிப் பயனடையும் விவசாயிகள், அதிக விலை கொடுத்து வெளியே வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தனியாருக்கு ஆதரவாக



தனியார் உர நிறுவனங்களுக்கு ஆதரவாக, வேளாண் துறை அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், டியூகாஸ் நிறுவனத்தின் உர உரிமத்தை திரும்பப் பெறுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உர உரிமம் ரத்து ஏன்?



'டியூகாஸ்' சொசைட்டி செயலர் கூறியதாவது:டியூகாஸ் நிறுவனத்தில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, வேளாண் துறை அளித்த உர ஒதுக்கீட்டு அளவை விட, கூடுதலாக கொள்முதல் செய்ததன் காரணமாகவே லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பதிவேடுகளில் உள்ள மூலப்பொருள் உரங்களின் இருப்பும், கையிருப்பில் இருந்த உரங்களின் இருப்பும் சரியாகவே உள்ளது.

கலப்பு உரம் தயாரிப்புக்கு தேவையான நேரடி உரங்களின் மூன்று மாத மொத்தத் தேவையில், 20 சதவீதம் அளவே, வேளாண் துறையால் ஒதுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உரிய காலத்துக்குள் கலப்பு உரம் தயாரித்து வினியோகிக்கவே, ஒதுக்கீட்டு அளவை விட சற்று கூடுதலாக உரம் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்காக மட்டுமே, டியூகாஸ் நிறுவனத்தின் உர உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
-நமது நிருபர்-



வாசகர் கருத்து (6)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் சோதனை ?/ பிறகு தடை ? உடனே இங்கு உள்ள பிஜேபி சொம்புகள் விடியல் ஆட்சில் இப்படித்தான் நடக்கும் என்பார்கள்

  • ponssasi - chennai,இந்தியா

    பாதிக்கபடுவது விவசாயியேதானே.

  • ராஜா -

    தனியாருக்கு சாதகமாக நடப்பதால் - அது தான் விஞ்ஞான ஊழல் புகழ் திருட்டு திராவிட மாடல்.

  • Sathyanarayanan Sathyasekaren -

    0..........

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஐயா நிருபரே. ஒரு தரப்பு காரணத்தை மட்டும் வெளியிட்டுள்ளீர்களே. அது மத்திய அரசோ, மாநில அரசோ, இந்த குற்றச்சாட்டிலுள்ள உண்மை தன்மையை மற்ற தரப்பு காரணத்தையும் சேர்த்து வெளியிட்டால் தான் என்ன நடக்கிறது என்பது புரியும். மத்திய அரசு அதிகாரிகள் இப்படி செய்திருந்தால் ஏன் மாநில துறை அதிகாரிகள் அவர்களிடம் பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. முழுமையான தகவல்களுடன் செய்திகளை வெளியிடுங்கள் பிளீஸ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement