dinamalar telegram
Advertisement

பணியில் கவனம் செலுத்தாக மருத்துவ அலுவலர்கள் இரண்டு பேர் பணியிட மாற்றம்

ADVERTISEMENT
வேலுார் : பணியில் சரியான முறையில் கவனம் செலுத்தாக மருத்துவ அலுவலர்கள் இரண்டு பேரை பணியிட மாற்றம் செய்து அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பொன்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை. அமைச்சர்கள் வருவதையறிந்த டாக்டர்கள் அவசர, அவசரமாக வந்தனர்.


அப்போது, பாம்பு கடிக்கு மருந்து எடுத்து வரும்படி அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டதற்கு, எடுத்து வருவதாக டாக்டர்கள் கூறினர். கால் மணி நேரம் ஆகியும் எடுத்துவரவில்லை. கடைசியில் பாம்பு கடிக்கு இங்கு மருந்து இல்லை, இங்குள்ள கட்டிடம் பழுதடைந்துள்ளதால் எக்ரே கருவி கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதாக ஊழியர்கள் கூறினார்கள்.இதனால் டென்சனான அமைச்சர் சுப்பிரமணியன், அப்போது பணியிலிருந்த இரண்டு டாக்டர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

பின் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் சரியாக இல்லாததால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு பாம்பு கடிக்கு கூட மருந்துகள் இல்லை. நோயாளிகள் 50 கி.மீ., துாரத்திலுள்ள வேலுார் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றால் வழியில் இறந்து விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணி நிருபர்களிடம் கூறியதாவது: பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் வாங்கி வந்து வைக்காமல் உள்ளனர். மருந்தாளுநர் பணியிடமும் காலியாக உள்ளது. நான் வருவதை அறிந்து வேறு மருத்துவமனையிலிருந்து மருந்தாளுநரை அனுப்பியுள்ளனர். டாக்டர்கள் உள்ளூரில் இருப்பதால் சரியாக செயல்படவில்லை. தமிழகத்தில் புதியதாக மயிலாடுதுறை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், பெரம்பலுார், தென்காசி ஆகிய ஆறு இடங்களில் மருத்துவக்கல்லுாரிகள் அமைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. போதுமான மருந்துகள் 38 மாவட்டங்களிலும் மருத்துவ கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மருந்துகளை டாக்டர்கள் பெற்று வருவதில்லை. இதனால்தான் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமானால் அனைத்து மருத்துவ கிடங்குகளையும் செய்தியாளர்கள் ஆய்வு செய்யலாம். மருந்து தட்டுப்பாடு என தெரியவந்தால் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியான முறையில் பணியில் கவனம் செலுத்தாமலும், அமைச்சர்களிடம் பொய் சொன்ன பொன்னை வட்டார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா, மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு அடிப்படை வசதிகள், புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் துரைமுருகன் மருந்து தட்டுப்பாடு உள்ளது என நிருபர்களிடம் கூறினார். அதேயிடத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று உறுதிபட கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement