தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் பர்சன்டேஜ் வீடியோ வெளியானதால் சிக்கல்
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வாக இருப்பவர் வில்வநாதன். சில நாட்களுக்கு முன், ஆம்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில், மாதனுார் ஊராட்சி ஒன்றிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடந்தது.ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட, 15 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்றனர். மாதனுார் ஒன்றியத்தில் கிராம பஞ்சாயத்துக்களுக்கு ஒதுக்கப்படும் டெண்டரை யாருக்கு கொடுப்பது என்ற பேச்சு நடந்தது.
அதில், 'ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு, 40 சதவீதம் கமிஷனை லஞ்சமாக கொடுத்து விடுங்கள்; கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு, 60 சதவீதம் எடுத்துக் கொள்ளுங்கள்' என, எம்.எல்.ஏ., வில்வநாதன் பேசியுள்ளார். எம்.எல்.ஏ., பேசிய வீடியோ அங்கிருந்த ஒரு தி.மு.க., கவுன்சிலர் வாயிலாக வெளியானது. அதில், 'எம்.எல்.ஏ., 40 'பர்சன்டேஜ்' கேட்கிறார்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.இது குறித்து, எம்.எல்.ஏ., வில்வநாதன் நேற்று கூறியதாவது: இந்த வீடியோவில் பேசியது நான் தான். வீடியோவில் பணம் என்ற வார்த்தை வரவில்லை; எனக்கு கொடுங்கள் என்றும் வரவில்லை. கிராம பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் வேலையில், 40 பர்சன்ட்டேஜ் ஒன்றிய தலைவர்களுக்கு செய்யப்படும்; 60 பர்சன்ட்டேஜ் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு செய்யப்படும் என்று தான் பேசினேன்.முழு வீடியோவை வெளியிட்டால் உண்மை தெரியும். சிலர், 'எடிட்' செய்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!