அமைச்சர்கள் நேரடி ஆய்வில் சொதப்பல் இரு அரசு டாக்டர்கள் அதிரடியாக மாற்றம்
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பொன்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை. அமைச்சர்கள் வருவதை அறிந்த டாக்டர்கள் அவசர அவசரமாக வந்தனர்.பாம்பு கடிக்கு மருந்து எடுத்து வரும்படி அமைச்சர் சுப்ரமணியன் கூறினார். எடுத்து வருவதாக கூறிச் சென்ற டாக்டர்கள்,கால் மணி நேரம் ஆகியும் வரவில்லை.
கடைசியில், 'பாம்பு கடிக்கு இங்கு மருந்து இல்லை; இங்குள்ள கட்டடம் பழுதடைந்துள்ளதால் எக்ஸ் - ரே கருவி உள்ளிட்டவை, கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன; அங்கு தான் உள்ளன' என்றனர்.இதனால் கோபமான அமைச்சர் சுப்ரமணியன், பணியிலிருந்த இரண்டு டாக்டர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
நடவடிக்கை
பின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ''பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் சரியாக இல்லாததால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.''இங்கு பாம்பு கடிக்கு கூட மருந்துகள் இல்லை. நோயாளிகள், 50 கி.மீ.,யில் உள்ள வேலுார் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குள் வழியில் இறந்து விடுகின்றனர்,'' என்றார்.\
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் வாங்கி இருப்பு வைக்காமல் உள்ளனர். மருந்தாளுனர் பணியிடமும் காலியாக உள்ளது.நான் வருவதை அறிந்து வேறு மருத்துவமனையிலிருந்து மருந்தாளுனரை அனுப்பியுள்ளனர்; டாக்டர்கள் உள்ளூரில் இருப்பதால் சரியாக செயல்படவில்லை.
தமிழகத்தில் புதிதாக மயிலாடுதுறை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், பெரம்பலுார், தென்காசி ஆகிய ஆறு இடங்களில் மருத்துவ கல்லுாரிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. போதுமான மருந்துகள், 38 மாவட்டங்களிலும் மருத்துவ கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து மருந்துகளை டாக்டர்கள் பெற்று வருவதில்லை.உத்தரவுஇதனால் தான் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமானால் அனைத்து மருத்துவ கிடங்குகளையும் செய்தியாளர்கள் ஆய்வு செய்யலாம்.
மருந்து தட்டுப்பாடு என தெரியவந்தால், '104' என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியான முறையில் பணியில் கவனம் செலுத்தாமலும், அமைச்சர்களிடம் பொய் சொன்ன பொன்னை வட்டார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா, மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!