தந்தை உத்தரவை முதல்வர் காப்பாற்றுவாரா? கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணீருடன் எதிர்பார்ப்பு
மதுரை:தமிழக, அரசு கலைக் கல்லுாரிகளில் பணியாற்றும் யு.ஜி.சி., தகுதி பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் அ.தி.மு.க., - தி.மு.க., என இரண்டு ஆட்சிகளின் முரண்பட்ட உத்தரவுகளால் 12 ஆண்டுகளாக பணி நிரந்தரமின்றி கண்ணீர் வடிக்கின்றனர்.'அரசு கலைக் கல்லுாரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் பிஎச்.டி., நெட், செட் என யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வால் பணி நிரந்தரப்படுத்தப்படுவர்' என, 2010ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். ஆனால், 2011ல் அ.தி.மு.க., ஆட்சி வந்தது. 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக தேர்வு செய்ய, 2020 மார்ச் 21ல் உத்தரவு பிறப்பித்து, தேர்வுக் குழு நியமனம் செய்யப்பட்டது.பின், 2021 பிப்., 15 முதல் 18 வரை சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. ஆனால் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நேர்முக தேர்வு நடக்கவில்லை. மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தது.அ.தி.மு.க., ஆட்சியில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்காக பல மாதங்கள் காத்திருந்த நிலையில், சிறப்பு டி.ஆர்.பி.,யால் நியமனம் செய்யப்படுவர் என அறிவித்து, அ.தி.மு.க., நியமித்த தேர்வுக் குழு கலைக்கப்பட்டது. தற்போது வரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தில், 1996 -- 2000 வரை எழுத்துத் தேர்வு முறையே பின்பற்றப்பட்டது. 2006க்கு பின், நேர்காணல் முறை வந்தது. நீதிமன்றங்களும் கல்லுாரி ஆசிரியர் பணிக்கு நேர்முகத்தேர்வு முறை சிறந்தது என தீர்ப்புகள் வழங்கின. யு.ஜி.சி.,யும் இதையே வலியுறுத்துகிறது. நாங்கள் 16 ஆண்டுகளாக நேர்காணலுக்கு தயாராகி வந்த நிலையில் திடீரென அரசு எங்களை எழுத்துத் தேர்வுக்கு தள்ளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேர்காணலுக்கு தயாராகியுள்ள 1,146 பேரும் 45 வயதை கடந்து, குடும்பம், பொருளாதார நெருக்கடி, குறைந்த சம்பளத்தால் கடும் மனஉளைச்சலில் உள்ளோம். 2010ல் கருணாநிதி அளித்த உத்தரவுப்படி நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!