Advertisement

செய்திகள் சில வரிகளில் கரூர்

குடிநீர் குழாய் உடைப்பால்
பொதுமக்கள் அவதி

கரூர், அக். 2-
கரூர் அருகே உடைந்த குடிநீர் குழாய், தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் அருகே ஈசநத்தம், சுக்காம்பட்டி பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இப்பகுதியில் போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், தற்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, போர்வெல் பழுது நீக்கி, புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகள் நிழற்கூடம்
சீரமைக்கப்படுமா?
கரூர், அக். 2-
கரூர், சாரதா நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாரதா நகர் பஸ் ஸ்டாப்பில், உள்ள பயணிகள் நிழற்கூடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இதனை சீரமைக்க கோரி, பல முறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பஸ்சுக்காக காத்திருக்கும்‍போது வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பயணியர் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
முட்புதர்களால்

தேங்கும் கழிவுநீர்
கரூர், அக். 2-
கரூர் அருகே கழிவுநீர் கால்வாயில் மண்டிக்கிடக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் அருகே கோடங்கிப்பட்டியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், அதிகளவில் முட்புதர்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக, இவை அகற்றப்படவில்லை. தற்போது மழை பெய்து வரும் நிலையில் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் உள்ள, அடைப்புகளை அகற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மொபட் மீது லாரி மோதல்
மாமியார், மருமகன் பலி
கரூர், அக். 2-
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே, மொபட் மீது லாரி மோதிய விபத்தில், மாமியார், மருமகன் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, காளியப்பனுார் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ், 34, வக்கீல். இவர் நேற்று முன்தினம் இரவு, மாமியார் சுசீலாவை, 50,ஹோண்டா டியோ மொபட்டில், அழைத்துக்கொண்டு, வெள்ளியணை அருகே ஒத்தையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தோகைமலையில் இருந்து கிரானைட் கல் ஏற்றி சென்ற லாரி, மொபட் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே கனகராஜ், சுசீலா ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மதுரை மாவட்டம், பழைய சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்த, லாரி டிரைவர் கர்ணன், 50, மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீடுபுகுந்து பெண்ணிடம்
தாலி செயின் பறிப்பு
குளித்தலை, அக். 2-
குளித்தலை, பெரியபாலம், சேதுரத்தினபிள்ளை தெருவை சேர்ந்தவர் சுமதி, 56. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2:00 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், சுமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.
அப்போது, திடுக்கிட்டு எழுந்த சுமதி, செயினை தன் கையில் இறுக்கி பிடித்துக் கொண்டார். இருப்பினும், மர்ம நபர் இழுத்ததில், இரண்டு பவுன் அறுந்து அவரிடம் சிக்கியது. சுமதியின் சத்தம் கேட்டு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த அவரது மகன் ஓடிவந்து, மர்ம நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். சுமதி கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மொபட்டில் தடுமாறி விழுந்த
கூலி தொழிலாளி பலி
குளித்தலை, அக். 2-
குளித்தலையை அடுத்த, கீழ பஞ்சப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ், 58. இவர் கடந்த மாதம் 18ம் தேதி மாலை 5:30 மணியளவில் தனது டிவிஎஸ் எக்ஸ்.எல்., மொபட்டில் மதுக்கரை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார்-.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், நடராஜ் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அமுதா, 45, அளித்த புகாரின்படி மாயனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மருந்தாளுநர் தின விழா
கரூர், அக். 2-
தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் சுரேஷ்குமார் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் மருந்தாளுநர் தின விழா நடந்தது.
இதில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தரமான மருந்து கிடங்குகள் அமைக்க வேண்டும், தனியார் மருந்து கடைகளில், முழு நேர மருந்தாளுநர்களை கொண்டு, மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில், மாநில செயலாளர் இளங்கோ, மாவட்ட அமைப்பு செயலாளர் பிரேம்குமார், மாவட்ட செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் புகழேந்தி, உமா, அறிவுசெல்வி, முஸ்தபா உள்பட பலர் பங்கேற்றனர்.
முதியவரை அரிவாளால்
வெட்டிய கொத்தனார் கைது
குளித்தலை, அக். 2-
குளித்தலையை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., கோட்டைமேட்டை சேர்ந்தவர் ராவணன், 75. இவரது மகன் மணிவேல். இவர், அதே ஊரை சேர்ந்த கொத்தனார் விக்னேஷ்குமாரிடம், 24, கடன் வாங்கினார்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி மாலை 6:45 மணியளவில், விக்னேஷ்குமார், அவரது தாய் சரோஜா ஆகிய இருவரும் மணிவேல் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ்குமார், தன் கையில் வைத்திருந்த அரிவாளால், முதியவர் ராவணன் தலையில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த ராவணன், குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின்படி, விக்னேஷ்குமார், சரோஜா ஆகிய இருவர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விக்னேஷ்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது தாய் சரோஜாவை தேடி வருகின்றனர்.
கரூரில் இன்று
தமிழ்நாடு கொங்கு இளைஞர்
பேரவை பொதுக்குழு கூட்டம்
கரூர், அக். 2-
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மாநில பொதுக்குழு கூட்டம், கரூரில் இன்று நடக்கிறது.
கரூர் - கோவை சாலையில் உள்ள, கொங்கு திருமண மண்டபத்தில் காலை, 9:30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், நிறுவன தலைவர் தனியரசு பங்கேற்கிறார். மாநில மற்றும் அனைத்து மாவட்ட அளவிலான நிர்வாகிகள், கூட்டத்தில் கலந்து கொள்கின்றநர். ஏற்பாடுகளை கரூர் மாவட்ட தலைவர் அருள்குமார் செய்துள்ளார்.
சந்தையூரில் ஆடுகள்
விற்பனை மந்தம்
கிருஷ்ணராயபுரம், அக். 2-
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த இரும்பூதிப்பட்டி அருகே, சந்தையூரில் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை கூடுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தாங்கள் பயிரிடும் காய்கறிகள் மற்றும் ஆடு, கோழி ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டுவருகின்றனர்.
இந்த வாரத்தில் நேற்று கூடிய சந்தையில், விற்பனைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது. இதனால் வியாபாரம் மந்த நிலையில் இருந்தது. மேலும், ஆடு ஒன்று 7,500 ரூபாய் விலையில் விற்கப்பட்டது. நாட்டுக்கோழி எடையைப் பொறுத்து, 350 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையூரில் ஆடு, கோழிகள் வாங்குவதற்கு குளித்தலை, பஞ்சப்பட்டி, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
மூத்த வாக்காளர்களுக்கு
பாராட்டு விழா
கரூர், அக். 2-
சர்வதேச முதியோர் தினத்தை ஒட்டி, மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டு விழா, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், 80 வயதுக்குட்பட்ட மூத்த வாக்காளர்கள், 15 பேர் அழைத்துவரப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கையழுத்திட்ட கடிதத்தை, கலெக்டர் பிரபுசங்கர் வழங்கி, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
டி.ஆர்.ஓ., லியாகத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டபாணி, சப் - கலெக்டர் சைபுதீன், தாசில்தார்கள் சிவக்குமார் (கரூர்), விஜயா (தேர்தல் பிரிவு) உள்பட பலர் உடனிருந்தனர்.
மாரியம்மன் கோவிலில்
மண்டல பூஜை
குளித்தலை, அக். 2-
குளித்தலையை அடுத்த, இனுங்கூர் பஞ்., ரெத்தினபுரி கிராமத்தில் கடந்த மாதம், கிராம மக்கள் சார்பில் புதிதாக மகா மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, 22வது நாள் மண்டல பூஜையை ஒட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையடுத்து கிராம மக்கள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவலிங்கபுரம் கிராமத்தில்
புதிய மின்மாற்றி
கிருஷ்ணராயபுரம், அக். 2-
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சிவலிங்கபுரம் கிராமத்தில் புதிய மின் மாற்றி அமைக்கும் பணி நடந்தது.
மாயனுார் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட புனவசிப்பட்டி அருகே சிவலிங்கபுரம் பகுதியில் 25 கே.வி.ஏ., புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடந்தது. இதன் மூலம் இக்கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தடையின்றி மின் வசதி கிடைத்துள்ளது.
மேலும், இந்த மின்மாற்றி மூலம் ஆறு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குளித்தலை உதவி செயற்பொறியாளர் பாலகுமரன், மாயனுார் உதவி மின் பொறியாளர் செல்வகுமார், மின்வாரிய பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கள்ளழகர் கோவிலில் தீ விபத்து
புத்தகங்கள், ரசீதுகள் கருகின
மதுரை, அக். 2-
மதுரை கள்ளழகர் கோவில் வளாக பொருட்கள் பாதுகாப்பு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில், ரசீதுகள், போட்டோ, புத்தகங்கள் கருகின.
மதுரை, அழகர் கோவிலில் கள்ளழகர் கோவில் வளாக, தெற்காடி வீதி அர்ச்சகர் குடியிருப்பு அருகே பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளது. இங்கு கோவில் வரவு செலவு ரசீதுகள், போட்டோக்கள், கோவில் வரலாறு தொடர்பான ஆன்மிக புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு, 7:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலுார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. புத்தகங்கள், ரசீதுகள், போட்டோக்கள் கருகின. அமைச்சர் மூர்த்தி, கோவில் உதவி கமிஷனர் ராமசாமி பார்வையிட்டனர். மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, அப்பன்திருப்பதி போலீசார் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement