ADVERTISEMENT
பல்லடம்;மூதாட்டி வீடியோவை தொடர்ந்து, 'ஓசி பயணம் வேண்டாம்; டிக்கெட் கொடுங்கள்' என, பெண்கள் அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்யும் மற்றொரு வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. கோவையை சேர்ந்த மூதாட்டி ஒருவர், 'எனக்கு இலவச டிக்கெட் வேண்டாம். நான் ஓசியில் செல்லவிரும்பவில்லை' என, அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில், 5 ரூபாயை பெற்றுக்கொண்ட கண்டக்டர் மூதாட்டிக்கு டிக்கெட் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போதுமற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள் சிலர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்கின்றனர். அதில், 'எங்களுக்கு எதற்கு ஓசி பயணம்? சிலிண்டர் விலை ஏறிவிட்டது. எண்ணெய் விலை ஏறிவிட்டது. எல்லா விலையும் ஏறிவிட்டது. ஐந்து ரூபாய் கொடுத்து எங்களுக்கு செல்ல தெரியாதா? நான்கு பஸ்கள் வந்தும் நிற்கவில்லை. எதற்கு நிற்காமல் செல்கின்றீர்கள். எதுக்கு இலவசம். ஓசியில் செல்ல வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. டிக்கெட் கொடுங்கள்' என்கின்றனர். பெண்கள் வாக்குவாதம் செய்வதை கண்டு, பஸ் கண்டக்டர் அங்கிருந்து நழுவி செல்கிறார். அரசு பஸ் எண், இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!