dinamalar telegram
Advertisement

மாநகராட்சி அவசர கூட்டத்தில் 52 தீர்மானம் நிறைவேற்றம்: வழக்கம்போல் தி.மு.க., கவுன்சிலர்கள் புலம்பல்

ஈரோடு : மாநகராட்சி அவசர கூட்டத்தில், 52 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வழக்கம்போல் தி.மு.க., கவுன்சிலர்கள் புலம்பலை கொட்டினர்.

ஈரோடு மாநகராட்சி அவசரக்கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், ஆணையர் சிவகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 52 தீர்மானங்களில், ஓரிரு தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். துணை மேயர், ஆணையர், அதிகாரிகள் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார்.

புதியதாக கட்டப்பட்டுள்ள கனி மார்க்கெட் கடைகளை பொது ஏலம் விடுவது, தற்காலிகமாக துாய்மை பணியாளர்களை நியமிப்பது, செம்மாம்பாளையம் ஆரம்ப பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, 33.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டுவது உள்பட, 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முதலாவது மண்டல தலைவர் பழனிசாமி பேசியதாவது: முதலாவது மண்டல வார்டு பகுதிகளில், 15 நாட்களாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதற்கு உடனடி தீர்வு வேண்டும்.

8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர்: எனது வார்டு பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

36 வார்டு தி.மு.க., கவுன்சிலர் செந்தில்குமார்: வ.உ.சி., பூங்காவுக்கு வரும் மக்களிடையே பணம் வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகம், பூங்காவை பராமரிக்கவில்லை. இதனால் பூங்காவில் ஆங்காங்கே புதர் மண்டியுள்ளது. பூங்காவை பராமரிக்க டெண்டர் விட வேண்டும்.

43வது வார்டு காங்., கவுன்சிலர் சபுராமா ஜாபர்சாதிக்: எனது வார்டு பகுதியில் பலமுறை கோரிக்கை விடுத்தும், நிதியை காரணம் காட்டி சாலை, குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இவ்வாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பிரச்னை, குறைகள் குறித்து பேசினர்.அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு

மாநகராட்சி, 20வது வார்டு டெலிபோன் நகரில் பூங்கா சுற்றுச்சுவரை, தி.மு.க., கவுன்சிலர் மோகன்குமார் இடித்தார். இதுகுறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். பதிலளித்த ஆணையர், ''பூங்கா இடிப்பு விவகாரத்தில், போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட பூங்கா சுற்றுச்சுவரை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறியும், தி.மு.க., கவுன்சிலர் மீது நடவடிக்கை வலியுறுத்தியும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு நிதி வரல!



கூட்டத்தில் நகர்நல அலுவலர் பிரகாஷ் பேசும்போது, ''நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி, சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது,'' என்றார்..

அவை மரபுக்கு எதிராக அஞ்சலி



வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியின் சகோதரர் செங்கோட்டையன் சமீபத்தில் காலமானார். அவருக்கு மாநகராட்சி கூட்டத்தில், நேற்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாமன்ற அவை மரபுக்கு எதிரானது என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement