dinamalar telegram
Advertisement

அத்திக்கடவு திட்டத்துக்கான தண்ணீர் குறித்த திட்டவரைவு: விரைவில் கூட்டம் நடத்துவதாக கலெக்டர் தகவல்

ஈரோடு : ''அத்திக்கடவு திட்டத்துக்கான தண்ணீர் குறித்து, விவசாயிகளுடன் விரைவில் கூட்டம் நடத்தி கருத்துகள் பதிவு செய்யப்படும்,'' என, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.ஈரோடு வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்ட விவாதம் வருமாறு:

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபிதளபதி: அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணி நிறைவடைந்து, நவ., முதல் வாரம் முதல்வர் திறந்து வைப்பதாக அறிந்தோம். அத்திட்டத்துக்கு உபரி நீர் எடுக்கப்படும் என்றால், எங்கிருந்து, எந்தெந்த காலங்களில் தண்ணீர் எடுக்கப்படும். விதிமுறை வகுக்கப்படாமல் திறப்பு விழா நடத்தினால், இங்குள்ள விவசாயிகள் பாதிக்கும் வகையில் தண்ணீர் எடுக்கும் நிலை வராது என உறுதி கூற இயலுமா. இதனால், விவசாயிகளுக்குள் மோதல் போக்கு ஏற்படாமல் அறிவிக்க வேண்டும்.

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி: அத்திக்கடவு திட்டத்துக்கு தண்ணீர் செல்வது குறித்த திட்ட வரைவு பற்றி தெரியவில்லை. திறப்பு விழாவுக்கு முன் அரசிடமும் பேசி, விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தி கருத்து பகிரப்படும்.

மலைவாழ் மக்கள் சங்க தலைவர் குணசேகரன்: மலைப்பகுதியில் சமையல் எண்ணெய், தாவர எண்ணெய் என்ற பெயரில் ஒரு லிட்டர், 90 ரூபாய் முதல், 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நிலக்கடலை பருப்பு மூலம் கிடைக்கும் ஒரு லிட்டர் எண்ணெய், 260 ரூபாய்க்கு மேல் விற்கும்போது, தரமற்ற எண்ணெய் பற்றி மாவட்ட நிர்வாகம், உணவுத்துறை ஆய்வு செய்ய வேண்டும். மலைப்பகுதியில் இருந்த தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் மூடப்பட்டதால், அக்குழந்தைகளின் படிப்பு தடைபட்டுள்ளது.

விளாங்கோம்பை பகுதி குழந்தைகள், 8 கி.மீ., துாரத்தில், 6 ஆறுகளை கடந்து வினோபா நகர் சென்று பள்ளி படிப்பை தொடரும் நிலை உள்ளது.

சிவசுப்பிரமணியம்: சித்தோடு ஆவின் பால் பண்ணைக்கான மாட்டு தீவன தொழிற்சாலை மூலம் வழங்கப்பட்ட மாட்டு தீவனம் கெட்டுப்போய் விற்பனை செய்கின்றனர். அவற்றை கால்நடை வளர்ப்போரிடம் திரும்ப பெற மறுக்கின்றனர்.

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி: ஆவின் தீவனம் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி: கீழ்பவானியில் நடவுப்பணி நடக்கும் நிலையில், முறைவைத்து தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன்: கடைமடை பகுதி விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் செல்லாததால், அவர்கள் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. பிற பகுதி விவசாயிகள் தெரிவித்த கருத்தின்படி வரும் திங்கள் முதல் முறையின்றி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement