செய்திகள் சில வரிகளில் ஈரோடு
அடையாள அட்டை
காங்கேயம், செப். 25-
மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து நல திட்டங்களுக்கான, ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. செய்திதுறை அமைச்சர் சாமிநாதன், 150 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கேயம் சேர்மன் மகேஷ்குமார், காங்கேயம் நகர தி.மு.க., செயலாளர் சேமலையப்பன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி, துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் வீட்டில் திருட்டு
தீயும் வைத்ததால் அதிர்ச்சி
வெள்ளகோவில், செப். 25-
பேராசிரியர் வீட்டில் திருடிய ஆசாமி, வீட்டுக்கு தீயும் வைத்ததால், வெள்ளகோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளகோவிலில் கோவை மெயின் ரோடு பழனிசாமி நகர், மூன்றாவது வீதியை சேர்ந்தவர் திருமுருக வீரக்குமார், 43; கோவை, சரவணம்பட்டியில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டுக்குள் இருந்து புகை வந்தது. அக்கம்பக்கத்தினர் தகவலின்படி காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். தகவல் கிடைத்து திருமுருகவீரக்குமார் விரைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த, 70 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. திருடிய ஆசாமி தீயும் வைத்து சென்றுள்ளான். அவர் புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
துாங்குவதில் போட்டி
விழுந்தது கத்திக்குத்து
காங்கேயம், செப். 25-
காங்கேயம் பஸ் ஸ்டாண்டில், மாரியப்பன், 45, என்பவர் நேற்று முன்தினம் துாங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த கஞ்சா வியாபாரி ராமசாமி, 58; நான் படுத்து உறங்கும் இடத்தில் நீ எப்படி படுக்கலாம்? என்று, மாரியப்பனை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ராமசாமி தான் வைத்திருந்த கத்தியால், மாரியப்பனை சரமாரியாக குத்தினார். அவர் சத்தம் கேட்டு அங்கிருந்த பயணிகள் சென்று, அவரை மீட்டனர். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கஞ்சா வியாபாரி மீது காங்கேயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
டிரில்லர் மெஷின் ஏறியதில்
காயமடைந்த விவசாயி சாவு
கோபி, செப். 25-
கோபி அருகே டிரில்லர் மெஷின் ஏறியதில் காயமடைந்த விவசாயி இறந்தார்.
கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 56; அதே பகுதியில் விவசாயி ஒருவரின் வயலில், தனது டிரில்லர் மெஷின் மூலம் உழவுப்பணியில் ஈடுபட்டிருந்தார். மெஷின் இயங்கும்போதே இன்ஜினுக்கு ஆயில் ஊற்றினார். அப்போது மெஷின் நகர்ந்து, இடது கால் மீது ஏறியதில், பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். சண்முகத்தின் தங்கை கோமதி, 53, புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில்
துாங்கியவர் சாவு
தாராபுரம், செப். 25-
தாராபுரத்தில் பஸ் ஸ்டாண்டில் துாங்கிய வாலிபர் இறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, 11:0௦ மணியளவில், ஒருவர் இறந்து கிடந்தார். தாராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
இதில் கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தை அடுத்த நடுப்பாளையத்தை சேர்ந்த துரைசாமி மகன் செல்வகுமார், 30, என்பது தெரிந்தது. சிறுநீரகம் செயலிழந்த நிலையில், கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது, தாராபுரத்தில் பஸ் கிடைக்காமல் படுத்து துாங்கியுள்ளார். அப்போது அவர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.\
தனியார் பள்ளி டிரைவர் பலி
கோபி, செப். 25-
பெருந்துறை அருகே, விஜயமங்கலத்தை சேர்ந்தவர் செபஸ்டியன் பாப்லி, 53; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி டிரைவர். பள்ளி வளாகத்தில் வாகனத்தை நேற்று முன்தினம் மதியம் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் மகன் புகாரின்படி திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மரத்தில் தொங்கிய சடலம்
ஈரோடு, செப். 25-
ஈரோடு அருகே காசிபாளையம் ஐ.டி.ஐ., பஸ் நிறுத்தம் எதிரே ஒரு மரத்தில், நேற்று முன்தினம் காலை, 55 வயது மதிக்கதக்க ஆண் துாக்கில் சடலமாக தொங்கினார். தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இறந்தவரின் வலது தோள் பட்டையில் கருப்பு மச்சம், கன்னத்தில் காய தழும்பு இருந்தது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய வேன்
சத்தியமங்கலம், செப். 25-
திம்பம் மலைப்பாதையில், கறிக்கோழி ஏற்றிச்சென்ற ஈச்சர் வேன் கவிழ்ந்ததில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து, கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலுக்கு, கறிக்கோழி ஏற்றிய ஈச்சர் வேன் புறப்பட்டது. கோழி லோடு இறக்கி விட்டு பல்லடத்துக்கு வேன் புறப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை வழியாக, நேற்று மதியம் வந்தது. 27வது கொண்டை ஊசி வளைவில், நிலைதடுமாறிய வேன் கவிழ்ந்தது. பிறகு, 26, 25வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையிலான மண் திட்டில் மோதி நின்றது. வேனில் பயணித்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். ஆசனுார் போலீசார் அவர்களை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க
தாசில்தாரை நியமித்த ஆர்.டி.ஓ.,
கோபி, செப். 25-
கோபி கோட்டத்தில் கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், தாளவாடி என ஆறு தாலுகா உள்ளது. இவற்றில், 19 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். அதற்காக ஸ்டேஷன் வாரியாக, தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் என ஸ்டேஷனுக்கு ஒருவர் வீதம், ௧௯ பேரை நியமித்துள்ளார். சட்டம்-ஒழுங்கை கண்காணித்து, அதன் விபரங்களை கோபி ஆர்.டி.ஓ., மற்றும் கலெக்டருக்கு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட போலீஸ் ஸ்டேசன்களில், நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!