dinamalar telegram
Advertisement

குமரி - காஷ்மீர் ஜோடோ யாத்ராவில் காங்., கெத்து!: ஏசி படுக்கை அறையுடன் கன்டெய்னரில் சொகுசு அறை: தினமும் 1,000 பேருக்கு மூன்று வேளை அறுசுவை உணவு: 5 மாதங்களில் ரூ.150 கோடி செலவழிப்பது பயன் தருமா?

ADVERTISEMENT
நாகர்கோவில்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, காங்., முன்னாள் தலைவர் ராகுல் நடத்தி வரும், 'ஜோடோ யாத்ரா'வில், நாள் ஒன்றுக்கு, 1 கோடி ரூபாய் வீதம், ஐந்து மாதங்களுக்கு, 150 கோடி ரூபாய் வரை செலவழிக்க, காங்கிரஸ் தயாராகி இருப்பது, சில தினங்களாக நடந்து வரும் பாத யாத்திரையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கோடிகளை வாரி இறைத்து நடத்தப்படும் இந்த யாத்திரையால், சரிந்து கொண்டிருக்கும் கட்சி செல்வாக்கை, ராகுல் துாக்கி நிறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.மன்மோகன் சிங் தலைமையில் தொடர்ந்து, 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, 2014 லோக்சபா தேர்தலுக்குப் பின், பெரும் சரிவை சந்தித்து வருகிறது. பல மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்து தவிக்கிறது.கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதில் கூட தெளிவில்லாமல் தத்தளிக்கிறது. இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமின்றி, இளம் தலைவர்களும் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.கட்சியை சரிவில் இருந்து மீட்டு, துாக்கி நிறுத்த ராகுல் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான், பாரத் ஜோடோ யாத்திரை.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்படும் இந்த, 'இந்திய ஒற்றுமை' நடை பயணத்தை, கடந்த 7ல் கன்னியாகுமரி, காந்தி மண்டபத்தில், தி.மு.க., தலைவரான முதல்வர் ஸ்டாலின், தேசிய கொடியை, காங்., ராகுலிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில், 55 கி.மீ., துாரத்தை நான்கு நாட்களில் ராகுல் பயணித்துள்ளார். நாள் ஒன்றுக்கு, 15 - 18 கி.மீ. துாரம் நடக்கிறார்.

பயணம் எப்படிராகுலுக்கு பின்னால் நான்கு சொகுசு கார்கள் உள்ளிட்ட, 15 வாகனங்கள் செல்கின்றன. ஒரு ஆம்புலன்சும், அதில் டாக்டர் குழுவினரும் செல்கின்றனர்.காலை, 7:00 மணிக்கு நடை பயணம் தொடங்கும் ராகுல், 9:30க்கு முடித்து, தங்கும் இடத்திற்கு செல்கிறார். வழி கடைகளில் டீ குடிப்பது, சிறுவர்களிடம் கொஞ்சுவது, கைகுலுக்குவது என, ஜனரஞ்சகமாக செயல்படுகிறார். மாலை, 4:00 மணிக்கு மீண்டும் நடக்க துவங்கும் ராகுல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறார்.மாலையில் ஒரு முக்கிய சந்திப்பில் சிறிய மேடையில் ஏறி நன்றி சொல்லிவிட்டு, தங்கும் இடத்துக்கு காரில் செல்கிறார். தினமும் மூன்றரை மணி நேரம் நடக்கிறார்.ராகுலுடன், 120 தொண்டர்கள், காஷ்மீர் வரை செல்கின்றனர். இவர்கள் தங்க, 60 கேரவன்கள், 10க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் செல்கின்றன.ராகுலுக்கு தனி கேரவனும், மற்ற முக்கிய பிரமுகர்களுக்கு பிற கேரவன்களும் பயன்படுத்தப்படுகின்றன. தொண்டர்கள் ஆங்காங்கே உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தங்குகின்றனர்.காலையில் ராகுல் புறப்பட்டதும், அடுத்து தங்கும் இடத்திற்கு, கேரவன்கள் சென்று விடுகின்றன.

உணவு வசதிராகுல் உடன் வருபவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், அந்தந்த மாவட்டத்தில் இருந்து நடை பயணத்தில் பங்கேற்பவர்கள் என, ஆயிரம் பேருக்கு தினமும், மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.காலை இட்லி, பொங்கல், வடை போன்றவையும், மதியம், இரவு வட மாநில உணவும் பரிமாறப்படுகிறது. இதற்காக நுாற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள், உடன் வருகின்றனர்.தினமும், 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்த செலவை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்கின்றனர்.கேரவன்களை நிறுத்தவும், சமையல் செய்யவும் வசதியாக உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்களை இரவு தங்குவதற்கு தேர்வு செய்துள்ளனர்.அந்தந்த நிர்வாகங்கள் இதற்கு எந்த கட்டணமும் வாங்குவதில்லை எனவும், ராகுல் தங்கள் நிறுவனத்துக்கு வந்தார் என்ற பெருமை போதும் என, அந்த நிர்வாகங்கள் கூறுவதாக பயண நிர்வாகிகள் கூறினர். பயண நேரம் போக மற்ற நேரங்களில், அந்தந்த பகுதி முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்திக்கிறார்.

தங்குமிடங்கள்பயண துவக்கத்தில் விவேகானந்தர் பாறைக்கு சென்று வந்த ராகுல், முதல் நாள் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லுாரியில் தங்கினார்.மறுநாள் பயணத்தின் மதியம் சுசீந்திரம் ஹிந்து நிர்வாக பள்ளியில் ஓய்வெடுத்தார். அதன் பின், அவர் தங்கிய அனைத்துமே கிறிஸ்தவ நிறுவனங்கள் தான். அங்கு அவரை ஏராளமான பங்கு தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் சந்தித்தனர். ஹிந்து மத பிரமுகர்கள் அதிக அளவில் ராகுலை சந்திக்கவில்லை.

செலவு என்ன?கேரவன் வாடகை, டீசல் செலவு, உடன் வரும் தொண்டர்களுக்கு சாப்பாடு செலவு, ஊழியர்களுக்கு சம்பளம் என, தினமும், 1 கோடி ரூபாய் வரை செலவாகிறது. இந்த வகையில் கணக்கிட்டால், அடுத்த, 150 நாட்களுக்கு, 150 கோடி ரூபாய் செலவாகும். இந்த செலவை காங்., ஆளும் மாநில முதல்வர்கள், அந்தந்த மாநில எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் ஏற்கின்றனர்.'நாடு பிளவுபட்டு கிடக்கிறது; மக்கள் மதத்தால் பிரிக்கப்பட்டுள்ளனர். 'கார்ப்பரேட்'டுகள் கையில் இந்தியா சிக்குகிறது' என்றெல்லாம் யாத்திரையில் கூறப்படுகிறது.

கன்டெய்னர்களில் சொகுசு வசதி!

வரும் 2024 லோக்சபா தேர்தலில் எப்படியாவது மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த பாத யாத்திரையில், ராகுல் 3,570 கி.மீ., நடக்க உள்ளார்.ராகுலுடன், தலைவர்கள், தொண்டர்கள், 120 பேர் உடன் செல்கின்றனர். இவர்கள் தங்க வசதியாக, கேரவன்கள், கன்டெய்னர்கள் உடன் செல்கின்றன. இவற்றில், 'ஏசி' படுக்கை அறை உட்பட நவீன வசதிகள் உள்ளன. ஒரு கன்டெய்னரில் சிறிய 'கான்பரன்ஸ் ஹாலும்' உள்ளதாம். சில சமயம் ராகுல், இந்த ஹாலில் உரையாற்றுவாராம்.முதல் கன்டெய்னரில் ராகுல் தங்குகிறார். இதில், கழிப்பறையுடன் கூடிய சொகுசு அறை உள்ளது. இரண்டாவது கன்டெய்னரில், ராகுலின் பாதுகாப்பு அதிகாரிகள் உறங்குவர்.பெண் தொண்டர்களுக்கு தனி கன்டெய்னர் உள்ளது. இதில், ரயில்களில் உள்ளதுபோல மேலும், கீழும் படுக்கை வசதி, குளியல் அறை வசதி உள்ளது.சில கன்டெய்னர்களில், பொது குளியல் அறை உள்ளது. கட்சி தலைவர் மற்றும் தொண்டர்களை தவிர, கடைநிலை ஊழியர்களும் இந்த பாத யாத்திரையில் உள்ளனர். இவர்கள் கன்டெய்னர்களில் உள்ள படுக்கை அறைகளை சுத்தப்படுத்துகின்றனர்.சாலை ஓரங்களில் கன்டெய்னர்கள் நிறுத்தப்பட்டு, சாலையில் அனைவருக்கும் சமையல் செய்யப்படுகிறது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை துணி துவைத்து சுத்தப்படுத்தப்படுகிறது.'இவ்வளவு வசதிகளுடன் ராகுல் செல்வது பாத யாத்திரையா?' என, பா.ஜ.,வினர் கிண்டல் செய்கின்றனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement