dinamalar telegram
Advertisement

இந்தியாவை எவராலும் பிளவு படுத்த முடியாது அடைத்து வைத்து கேள்வி கேட்டாலும் அஞ்சோம்: கன்னியாகுமரியில் ராகுல் ஆவேசம்

ADVERTISEMENT
நாகர்கோவில்:''இந்தியாவை எவராலும் பிளவு படுத்த முடியாது. எத்தனை மணி நேரம் அடைத்து வைத்து கேள்வி கேட்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படமாட்டோம்,'' என்று கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்., எம்.பி., ராகுல் ஆவேசமாக பேசினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல் மேற்கொள்ளும் 150 நாள் 'பாரத் ஜோடோ யாத்திரை' கன்னியாகுமரியில் நேற்று மாலை துவங்கியது. விவேகானந்தர் மண்டபம், காந்தி மண்டபத்தில் தியானத்துக்கு பின் காந்தி மண்டபத்தின் வெளியே ராகுலிடம் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி துவக்கி வைத்தார்.

ராகுல் அங்கிருந்து நடந்து பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.அவர் பேசியதாவது: தேசத்தை ஒற்றுமைப்படுத்த உணர்வு தேவைப்படுவதால் இந்த பாத யாத்திரை நடத்தப்படுகிறது. தேசியக்கொடியை அதன் மாட்சிமைக்காகவும், மகிமைக்காகவும் வாழ்த்தி வணங்க வேண்டும் என நினைக்கிறோம். இது நமக்கு சாதாரணமாக வந்துவிடவில்லை.
இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வெல்லப்பட்ட கொடி. இது இந்தியாவில் வாழும் மக்களையும் ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு மொழியையும், மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஒரு நபருக்கான கொடி அல்ல. இந்திய மக்களின் உரிமைகளை பாதுகாக்கிறது. தேச மக்கள் விரும்பும் மொழி, கலாசாரத்தை கொண்டாடும் உரிமையை இது தந்திருக்கிறது.
இன்று இந்த கொடி தாக்குதலுக்கும், அச்சத்துக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா என்பது எல்லோர் மீதும் திணிக்கப்பட்ட தனி தத்துவம் அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த உருவகம் இந்த கொடி. இந்தியா என்ற நிறுவனம் கொடியையும், இந்தியா தத்துவத்தையும், சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் குரல் பாதுகாக்க வேண்டும்.
ஒவ்வொரு ஜனநாயக நிறுவனமும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.,வால் அச்சுறுத்தப்படுகிறது. தனிப்பட்ட முறையில் அவர்கள் நாட்டின், மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என நினைக்கிறார்கள். எதிர்கட்சிகளை சி.பி.ஐ., வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வுத் துறை மூலம் மிரட்ட பார்க்கிறார்கள்.
இந்தியர்களை பற்றி அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இந்திய மக்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள் என அவர்களுக்கு தெரியவில்லை.எத்தனை மணி நேரம் அடைத்து வைத்து கேள்வி கேட்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படமாட்டோம். எங்களை முடக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. நாட்டை மதம், மொழியின் மூலம் பிளக்கலாம் என பா.ஜ., நினைக்கிறது. அது முடியாது.
இந்த நாடு எப்போதும் ஒற்றுமையாகத்தான் இருக்கும். வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடி, வேலை இல்லா திண்டாட்டம் மூலம் பேரழிவை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டு இருக்கிறது. துரதிஷ்டவசமாக ஊடகங்கள் வாய் மூடி மவுனமாக இருக்கின்றன. அவை பிரதமரின் முகத்தை மடும்தான் காண்பிக்கும். பா.ஜ., அரசு திட்டமிட்டு விவசாயிகளை, கூலி தொழிலாளிகளை, ஏழைகளை நசுக்குகிறது. குறிப்பிட்ட பெரும் தொழிலதிபர்கள் நாட்டின் பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் இல்லாமல் பிரதமரால் அரசியல் ரீதியாக ஒரு நாள் கூட உயிர்வாழ முடியாது. தொழிலதிபர்களுக்கு வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவதில் பிரதமர் குறியாக உள்ளார். ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் எல்லாம் தொழிலதிபர்களின் பணத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள்.ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு இருந்த அணுகுமுறைதான் பா.ஜ., அரசுக்கும் உள்ளது.
இந்தியாவை பிரித்து, இந்தியர்களை மோத விடுவார்கள். அவர்கள் மோதும்போது அவர்களின் பணத்தை எடுங்கள் என்பதுதான் இவர்களின் கொள்ளை. விலைவாசியால் இதுவரை வரலாற்றில் இல்லாத மோசமான காலக்கட்டத்தில் தள்ளப்படுள்ளோம்.
எனவே இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தும் அவசியம் ஏற்படுள்ளது. அதுதான் நான் தொடங்கியிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை. அதன் மூலம் மக்களின் கோரிக்கைகளை, உணர்வுகளை, கேட்க முடியும். மக்களின் ஏக்கங்களை, ஆசைகளை பா.ஜ., போல நசுக்க விரும்பவில்லை. இந்திய மக்களின் ஞானத்தை கேட்க விரும்புகிறேன்.இங்கு வந்து வாழ்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.
நடைபயணம் தொடங்கும்போது மக்கள் அன்பை பெறுவேன் என நம்புகிறேன். தேசிய கொடியின் தத்துவம், கொள்கை, எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை காக்க வேண்டும் என்றார்.தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது: காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரையை பிரிட்டீஷ் அரசு ஏளனமாக விமர்சித்தது. ஆனால் அந்த யாத்திரை நிறைவு பெற்ற போது பலம் வாய்ந்த பிரிட்டீஷ் அரசு சரிந்தது. சனாதான தமர்மம் என்ற பெயரில் ஹிந்து, கிஸ்தவர், முஸ்லிம் என ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் பிரித்தார்கள். அனைவரும் இந்தியர்கள் என்று காந்தியடிகள் அன்று சொன்னார். இன்று ராகுல் அதை சொல்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக காங்., தலைவர் அழகிரி, சட்டசபை கட்சி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ்பாகல், மத்தியபிரேதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்அசோக் கெலாட், காங்., பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்தி பேசினார்கள்.

'என் அன்பு சகோதரர் ஸ்டாலின்'* காந்தி மண்டபத்தில் காந்தியடிகளின் அஸ்திகூடம் அமைந்த பகுதியில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
* மாலை 5.10 மணிக்கு ராகுல் மேடைக்கு தேசிய கொடியுடன் வந்தார். அப்போது கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது* ஜோதிமணி எம்.பி., நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
* யாத்திரை வெற்றி பெற காங்., தலைவர் சோனியா வாழ்த்து அனுப்பியிருந்தார்.
* ப.சிதம்பரம் தனது உரையில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நான்காவது கடல் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். ஒளிபடைத்த கண்ணினாய் வாவா என்ற பாரதியார் பாடலுடன் பேச்சை முடித்தார்.
* ராகுல் உரையை நிறைவு செய்யும் போது ' என் அன்பு சகோதரர்' என்று முதல்வர் ஸ்டாலினை குறிபிட்டார்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement