ரவுடியின் கூட்டாளியை கொலை செய்ய ஆயுதங்களோடு பதுங்கிய 7 பேர் கைது
புதுச்சேரி, சண்முகாபுரம் வெள்ளவாரி வாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 3.40 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், புனிதராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற 7 பேரை மடக்கிப் பிடித்தனர்.அவர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, வீச்சரிவாள் ஆகிய ஆயுதங்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர்.
அவர்களை மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், சண்முகாபுரம் பாரதிபுரத்தை சேர்ந்த நாகராஜ் மகன் அய்யனார்,26; மாணிக்க செட்டியார் நகர் முருகதாஸ் மகன் விஸ்வநாதன்,21; திலாஸ்பேட்டை, வீமன் நகர் கிருஷ்ணன் மகன் அகிலன்,22; முத்தியால்பேட்டை, டி.வி. நகர் கலைவாணன் மகன் சந்துரு,22; திலாஸ்பேட்டை, ஐயனார் கோவில் தெரு, வீரப்பன் மகன் சசிக்குமார்,20; சண்முகாபுரம், நெசவாளர் குடியிருப்பு ஏழுமலை மகன் சதீஷ்,20; கோரிமேடு, காமராஜர் நகர், குமார் மகன் ஆனந்தகுமார்,20; ஆகியோர் என்பது தெரியவந்தது.
சண்முகாபுரத்தை சேர்ந்த சகோதரர்களான ரவுடிகள் மார்ட்டின், ஏசுராஜ் ஆகியோர் துாண்டுதலில், இவர்களுக்கு எதிரியான அதே பகுதியை சேர்ந்த ஜான்டியின் கூட்டாளி பிரசாத்தை கொலை செய்ய பதுங்கி இருந்ததை ஒப்பு கொண்டனர். தொடர் விசாரணையில், சில தினங்களுக்கு முன், மார்ட்டினுக்கு நெருக்கமாக இருந்த கோரிமேடு பகுதியை சேர்ந்த, பன்னீர் செல்வத்தை ஜான்டி வெடிகுண்டு வீசி கொலை செய்தார்.
பேனர் வைத்த தகராறில் ஏசுராஜை, ஜான்டியின் கூட்டாளிகள் அபினேஷ், பிரசாத் தாக்கினர். இதனால் மார்ட்டின், ஜான்டிக்கு பக்கபலமாக உள்ள பிரசாத்தை கொலை செய்ய திட்டமிட்டார். பிரசாத் எப்போதும் வெள்ளவாரி வாய்க்கால் வழியே செல்வது வழக்கம். அதை நோட்டமிட்டு, அவரை கொலை செய்ய, ஏழு பேரும் ஆயுதங்களோடு பதுங்கியது தெரிந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். கொலை செய்ய துாண்டிய மார்ட்டின், ஏசுராஜை போலீசார் தேடி வருகின்றனர். கைதான 7 பேர் மீதும் அடிதடி உட்பட பல வழக்குகள் உள்ளன.
கைதானவர்களின் அகிலன், சந்துரு ஆகியோர், கடந்த 15ம் தேதி இரவு, மேட்டுப்பாளையம் காய்கறி வியாபாரி வேல்முருகன் காரை பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் அம்பலமாகியது. வேல்முருகன் மகன் சிவப்பிரியன், ஜான்டி கூட்டாளி பிரசாத்தோடு நெருகி பழகியதால் காரை எரித்தது தெரியவந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!