புதுச்சேரி நகரப்பகுதியில் ராஜிவ் சிலை சதுக்கம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பாக உள்ளது. நுாறடி சாலையில் எல்லைப்பிள்ளைச் சாவடி ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையின் முதல் கேட் (உள்ளே செல்லும் வாயில்) எதிரில் இருந்து, ராஜிவ் சிலை சிக்னல் வரை 'பீக் ஹவர்' நேரங்களில் செல்வது சுலபமான காரியமல்ல. சரியான போக்குவரத்து திட்டமிடல் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.இந்திரா சிலை சிக்னலில், சென்னை இ.சி.ஆர்., திண்டிவனம் சாலைகளில் செல்லும் வெளியூர் பயணிகளுக்கு உதவும் வகையில் வழிகாட்டி பலகை உள்ளது. அதனையடுத்து ராஜிவ் சிக்னலில் மட்டுமே வழிகாட்டி பலகை உள்ளது. நடுவில் எங்கும் வழிகாட்டி பலகை இல்லை.இதேபோல் சாலையை பிரித்து வழிகாட்ட நீண்ட தொலைவிற்கு டிவைடர்களும் இல்லை. இது, வெளியூர் வாகன ஓட்டிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்து வருகிறது.
இந்திரா சிக்னலில் இருந்து சென்னை இ.சி.ஆர் நோக்கி செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள், ராஜிவ் சிக்னல் டொயோட்டா கார் ஷோரூம் அருகே வந்த பிறகு தான், வழிகாட்டி பலகை தெரிகிறது.இதனால் அக்கார்டு ஓட்டலையொட்டி உள்ள வழுதாவூர் சாலை நோக்கி செல்லும் பகுதியில் வந்தபிறகு, சுதாரித்துக்கொண்டு, இ.சி.ஆர். நோக்கி திரும்புகின்றனர். திரும்ப முடியாத பட்சத்தில், சிக்னலுக்காக அங்கேயே நின்றுவிடுகின்றனர்.
இதேபோல் திண்டிவனம், பெங்களூரு, திருப்பதி நோக்கி செல்வோரும், வழுதாவூர் சாலை வழியாக செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகளும் திசை தெரியாமல் திக்குமுக்காடி, கடைசி நேரத்தில், ஓட்டல் அக்கார்டு பக்கம் திருப்புகின்றனர்.இதன் காரணமாக டொயோட்டா ஷோரூம் அருகே தாறுமாறாக வாகனங்கள் நின்று, தினமும் உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, ராஜிவ் சிக்னலில் தற்போதுள்ள 20 மீட்டர் துாரமுள்ள டிவைடரை, ராஜிவ்காந்தி மருத்துவமனை இரண்டாவது கேட் (வௌியே செல்லும் வாயில்) வரை நீட்டிக்க வேண்டும். அங்கு சாலை நடுவே வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.
அதாவது, இடது பக்கம் வழுதாவூர், கோரிமேடு, திண்டிவனம், சென்னை என்று வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். அதே போல் வலது பக்கத்தில், காலாப்பட்டு, மரக்காணம், சென்னை (இ.சி.ஆர்) என்று வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும்.அப்போது தான் குழப்பம் இல்லாமல் அங்கிருந்தே சென்னை இ.சி.ஆர். மற்றும் திண்டிவனம், வழுதாவூர் சாலை மார்க்கத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், உரிய வழித்தடத்தில் பிரிந்து செல்வர்.
இதன் மூலம் ராஜிவ் சிக்னலில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். மாநில நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் இணைந்து, அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தற்போது நகரப்பகுதியில், இரும்பு பேரிகார்டுகளை தவிர்த்து, நெளியும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் டிவைடர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பேரிகார்டுகள், சாலையின் அகலத்தை அடைத்துக் கொள்ளாமல், இரவில் ஒளிரும் தன்மை கொண்டதாகும்.ராஜிவ் சிக்னல் பகுதியில் தற்போதுள்ள கான்கிரீட் டிவைடரில் தொடங்கி, ராஜிவ் காந்தி மகளிர் மருத்துவமனை இரண்டாவது கேட் (அவுட் கேட்) வரை, இத்தகைய பிளாஸ்டிக் டிவைடர்களை அமைக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!