dinamalar telegram
Advertisement

நிலத்தடி நீரை பாதிக்கும் யூகலிப்டஸ் மரம் வளர்க்க தடை வருமா? இயற்கை காடுகளை அதிகரிக்க நடவடிக்கை தேவை

ADVERTISEMENT
தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயற்கை காடுகளை அழித்து வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்களால் நீர் வளம் பாழாவதைத் தடுக்க அதனை வளர்ப்பதற்கு தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன்மலை அடிவாரத்தில் இருந்து துவங்கி, கச்சிராயபாளையம், சங்கராபுரம், சின்ன சேலம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய ஊர்களைச் சுற்றி பல லட்சம் ஏக்கர் பரப்பில் தரைக்காடுகள் உள்ளன.கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் சமூகக் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இயற்கை காடுகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டு வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இங்கிருந்த பாரம்பரிய மரங்கள், மூலிகைச் செடிகள், நீர் நிலைகள் மற்றும் வனவிலங்குகள் அழிந்து விட்டன. பேப்பர் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான யூகலிப்டஸ் மரங்களை வளர்த்து சுழற்சி அடிப்படையில் அறுவடை செய்து விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் கிடைத்து வருகிறது.இயற்கைக்காடு அழிக்கப்பட்ட பின்னர் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வெப்பம் அதிகரித்து மழை பெய்வது குறைந்து வருகிறது.

யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் நீராதாரங்கள் பாழாகியது.அடர்ந்த வனப்பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தி, டிராக்டர் கொண்டு உழுது விளைநிலங்கள் போல் மாற்றி யூகலிப்டஸ் மரங்களைத் தவிர புல் பூண்டு கூட முளைக்க விடாமல் வனத்துறையினர் அழித்து விட்டனர்.இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும்.

கடந்த ஜூலை மாதம் சிவகங்கை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் நீராதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு அம் மரங்களை சிவகங்கை மாவட்டத்தில் வளர்க்கக்கூடாது என மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டது.அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெரும்பகுதி காடுகளில் இயற்கை வளங்களை அழித்துவிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் யூகலிப்டஸ் மரங்களை இனி வளர்க்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பல இடங்களில் யூகலிப்டஸ் மரங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய கன்றுகள் நடுவதற்கு வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.இதனை உடனடியாக தடுத்திடவும் மீண்டும் காப்பு காடுகளை உருவாக்கி மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement