dinamalar telegram
Advertisement

மழைநீர் சேகரிப்பு திட்டம் தீவிரமாகுமா? நிலத்தடி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை

ADVERTISEMENT
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மழைக்காலம் துவங்குவதற்கு முன், மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.


ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையில் தென்மேற்கு பருவமழையும், அடுத்து, அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரையில் வட கிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம்.பருவ மழையின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைக்கான அனைத்து நீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.ஆனால், சமீப காலமாக, பருவமழை குறித்த காலத்தில் சரி வர பெய்யாததால் குறையும் நிலத்தடி நீர் மட்டம் மீண்டும் உயருவதில்லை.


இதனால், இயற்கையில் கிடைக்கும் மழைநீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதை கருத்தில் கொண்டு, ஆறுகளின் குறுக்கே வெள்ள நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்பட்டன. அத்துடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது.


இதன் காரணமாக அரசு அலுவலக கட்டடங்கள், தனியார் வீடுகள், நிறுவனங்களின் மேற்கூரையில் இருந்து குழாய்களை அமைத்து தண்ணீரை நிலத்தடியில் சேகரிக்க உறிஞ்சி குழிகள் அமைத்தனர். இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. செயல்படாமல் இருந்த போர்வெல்கள் மழை நீர் சேகரிப்பு காரணமாக மீண்டும் நீர் சுரந்து செயல்பாட்டிற்கு வந்தது.வீடு மற்றும் வணிக வளாகம் கட்ட அனுமதி கொடுக்கும்போதே மழை நீர் சேகரிப்பு கட்டாயப்படுத்தப்பட்டது. அரசு அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டது.ஆனால், அவைகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என்றால் இல்லை.


வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை காண்பது அரிதாகஉள்ளது.பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கடமைக்கென வைக்கப்பட்டதே தவிர முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்தும் தொட்டிகள் சேதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.மழைநீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்ட குழிகளில் குப்பைகள் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. செடி, மரங்கள் முளைத்துள்ளன.


மழைநீர் தொட்டியில் வந்து விழுந்தாலும் நிலத்திற்குள் சென்று சேர முடியாத நிலைதான் உள்ளது.பல அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்புத் தொட்டி குப்பைத்தொட்டி போல் பராமரிக்கப்படுகிறது.எனவே, மழைநீரின் அவசியத்தை உணர்ந்து, அரசின் நல்ல திட்டமான மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, கடலுார் மாவட்டத்தில் தீவிரப்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும்.


வீடுகள், அலுவலகங்கள் மட்டுமின்றி, பொது இடங்களான பஸ்ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப்புகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொதுமக்களிடமும் மழைநீர் சேகரிப்பு குறித்து வர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.வரும் அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாக, இப்பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement