அக்கம் பக்கம் நாமக்கல்
குறைந்து வரும் நீர்மட்டம்
எருமப்பட்டி, ஆக. 17-
எருமப்பட்டி அருகே, கொல்லிமலை அடிவாரத்தில்,
சிங்களகோம்பை ஏரி அமைந்துள்ளது. கொல்லிமலையில்
கனமழை பெய்யும்போது, அங்கிருந்து வரும் தண்ணீர் சிங்களகோம்பை ஏரியில் தேக்கி வைக்கப்படும். கடந்தாண்டு பெய்த கன மழையால், ஏரி நிரம்பி வழிந்தது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், இந்த ஏரியின், 4 மதகுகள் வழியாக, விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், 300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்றது. தற்போது, கொல்லிமலை வீரகனுார் பகுதியில் மழை குறைந்ததால், அடிவாரத்தில்
உள்ள சிங்களகோம்பை ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும்
நின்றது. தற்போது இப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகமுள்ளதால், ஏரியில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்கு
அரசு பஸ் இயக்க கவுன்சிலர் மனு
மல்லசமுத்திரம், ஆக. 17--
மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட கோணங்கிபாளையம், குறுக்கலாம்பாளையம் பகுதிக்கு அரசு பஸ் இயக்கக்கோரி, அப்பகுதி கவுன்சிலர் சரவணன், கலெக்டருக்கு மனு அளித்துள்ளார்.
அந்த, மனுவில் கூறியிருப்பதாவது: மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட கோணங்கிபாளையம், குறுக்கலாம்பாளையம் பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து, 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளிப்பட்டிக்கு சென்றால் தான், பஸ் வசதி உண்டு. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் நடந்து சென்று சிரமப்படுகின்றனர். எனவே, சேலம் மற்றும் திருச்செங்கோடு மார்க்கமாக செல்லும் அரசு பஸ்களை, காலை, மாலை நேரங்களில், இப்பகுதிக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகபாரம் ஏற்றி வந்த
லாரிக்கு அபராதம்
ராசிபுரம், ஆக. 17-
ராசிபுரம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ராசிபுரம் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் நித்தியா தலைமையிலான அதிகாரிகள் நேற்று, சேலம் பிரதான சாலையில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் இருந்து ராசிபுரம் பகுதிக்கு டிப்பர் லாரி ஒன்று அதிக பாரம் ஏற்றி வந்தது. இதை நித்யா நிறுத்தி விசாரித்தார். டிரைவர்,
ஆவணங்களை தராமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதை அடுத்து லாரியை வே பிரிட்ஜிக்கு கொண்டு சென்று எடை போட்டு பார்த்தனர். இதில் அரசின் விதியை மீறி அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனால், அதிக பாரம் ஏற்றியதாக கூறி
சம்பந்தப்பட்ட லாரிக்கு, 56 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற வாகன தணிக்கை அவ்வப்போது தொடர்ந்து நடைபெறும் என நித்தியா தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!