சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி: முதலீட்டாளர்கள் தாக்குதல்; உரிமையாளர் ஓட்டம்
சேலம், ரெட்டியூர், தாசில்தார் காலனியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 54. இவர், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே, எல்.ஐ.சி., காலனியில், 'ஜஸ்ட் வின் ஐ.டி., டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' பெயரில் நிதி நிறுவனம் நடத்துகிறார். அதில், 'லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு மாதத்துக்கு பின், 18 ஆயிரம் வீதம், 12 மாதங்களுக்கு தரப்படும்' என,கூறினார்.
அதை நம்பி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், வேலுார், மதுரை, நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என, தமிழகம் முழுதும், 4,000 பேருக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக, வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும், 40 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
அந்த மாவட்டத்தில், காட்பாடியை சேர்ந்த லெனின், 40, குடியாத்தம் கணேசன், 42, ராபின்சன், 49, பிரேம்நாத், 37, ஜெயசித்ரா, 48, கவிதா, 29, பள்ளி கொண்டா கமலநாதன், 50, கே.வி.குப்பம் ரமேஷ், 52, ஆந்திரா மாநிலம், சித்துார் ராஜன், 52, ஆகியோர், நேற்று மாலை, 4:00 மணிக்கு எல்.ஐ.சி., காலனியில் உள்ள அலுவலகம் வந்தனர்.
அவர்கள், பாலசுப்ரமணியத்திடம் முதலீடு குறித்து கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முதலீட்டாளர்கள், பாலசுப்ரமணியத்தை தாக்கினர். பதிலுக்கு அவரது ஊழியர்கள், தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேலுாரில் இருந்து மேலும் முதலீட்டாளர்கள் வருவதாக கிடைத்த தகவலால், பாலசுப்ரமணியம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, அழகாபுரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாலசுப்ரமணியம் மீது முதலீட்டாளர்கள் புகார்படி, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடக்கிறது. இந்நிலையில், நிதி நிறுவன அலுவலகத்தில் மோதல் நடந்துள்ளது. தமிழகம் முழுதும், 1,600 கோடி ரூபாய் வரை, பாலசுப்ரமணியம் மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த தகவல்படி விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!