dinamalar telegram
Advertisement

இசை எனும் சிலை இன்னும் சீராகும்

ADVERTISEMENT


வைஷ்ணவி ராம்தாஸ், ஒரு வளர்ந்து வரும் கலைஞர். இரண்டு மணி நேரக் கச்சேரியை இவர் எப்படிக் கையாள்வார் என்பதை நேரடியாகப் பார்க்க, ஆவலுடன் சென்றோம்.

வீண் போகவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் என்பதாக உரிய சிலவற்றைச் சேர்த்து, அதே சமயம் வேண்டாதவற்றைக் களைந்து, அவர் ஆராதிக்கும் இசை எனும் இச்சிலையை வடிவமைத்தால், இன்னும் மேலும் அழகு கூடும்; வசீகரமும் பெற்று விடும். எல்லாம் இவரது குருநாதர் பார்த்துக் கொள்வார். கூறுவது நம் கடமை, பொறுப்பு. அரங்கின் உள்ளே சென்ற நேரத்தில் ஒரு காம்போதி. அடுக்கு அலைகள் போன்ற ஒரு ஆலாபனை. எடுத்த பாடல் ஏலரா ஸ்ரீ கிருஷ்ணா நாதோ.இதில், தியாகராஜர் தன் இஷ்ட தெய்வமான ராமனை விடுத்து, கிருஷ்ணர் பால் கவனத்தைச் செலுத்தி இருப்பார். ராமனைப் போல கிருஷ்ணனையும் பாவித்து அதே சுவாதந்திரியத்துடன், கோபம் ஏன் என்று வினவி, 'நீ இப்படி வாளாதிருந்தால் உன்னை நிந்தனை செய்ய மாட்டோமா' என்ற எள்ளலுடன் கீர்த்தனை நிறைவேறும்.இது, தியாகராஜ முத்திரையில்லாத ஒரு உருப்படி என்பது, இங்கே குறிப்பிடத்தக்கது.பரம புருஷ ஜகதீஸ்வர என்ற வசந்தா ராகத்தில் அமைந்த சுவாதித் திருநாள் கீர்த்தனையையும் கச்சேரியில் சேர்த்துப் பாடி, அந்த வாக்கேயக்காரரையும் கவுரவித்தார் வைஷ்ணவி.நேற்றைக்கு கஸ்துாரி அளித்த பைரவி ஆலாபனைக்குப் பின் வந்தது, பாலகோபால தான் இன்றும். அதே தீட்சிதர் தான் இன்றும்.இதை மேலான பாடாந்தரம் பெற்ற வைஷ்ணவி, சிதையாமல் அளித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.இவரின் இந்த உயர் பாடமுறைக்கு வழிகோலியவர்கள், பல சீடர்களை உருவாக்கிய கேதாரநாதன் மற்றும் மீரா கேதாரநாதன் தம்பதியினரும், தற்போது வைஷ்ணவி பயின்று வரும் வித்வான் ஆர்.எஸ்.ரமாகாந்த் ஆகியோர். ரமாகாந்த், காலஞ்சென்ற பத்ம பூஷண் விருது பெற்ற ஆர்.கே.ஸ்ரீகண்டனின் புதல்வர்.அன்று சுதந்திர தினமாதலால், அதை மனதில் நிறுத்தும் வண்ணம் பாரதியின் வந்தே மாதரம் கடைசியாகவும், நிறைவு செய்யும் வகையிலும் அளிக்கப்பட்டது. வயலினில் திருச்சேரை கார்த்திக்கின் ராக ஆலாபனைகள் தனிக்கற்பனை கொண்டிருந்தன.சுவரக் கோர்வைகள் அளிக்கும் போது, 'மெயின்' பாடகர் அளித்த போக்கிலேயே இவரும் அளித்துச் சிறப்பித்தார். லயத்தில் சேர்ந்த ஆடுதுறை குருபிரசாத் மிருதங்கத்திலும் மற்றும் கஞ்சிராவில் துணைநின்ற நெற்குணம் சங்கர், இருவரும் ஒவ்வொரு பாடலில் உள்ள பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் ஆகியவற்றுக்கு உகந்த முத்தாய்ப்புகளை, அறுதிகளை அங்கங்கே கொடுத்து, சிறந்த முறையில் வாசித்தனர். அவர்களின் தனியாவர்த்தனம் கொடுத்து வாசித்தல் எனும் முறையைப் பின்பற்றி, ஒரு 2 மணி நேரக் கச்சேரிக்கு சரியான அளவினதாக இருந்ததாக, மனதில் பட்டது. கச்சேரி முடிந்து அரங்கிலிருந்து வெளியில் வரும் வேளையில், இருவர் பேசிக் கொண்டது நம் காதில் விழாமலில்லை. பாட்டு செலக் ஷன் அபாரம். நல்ல எதிர்காலம்.எஸ்.சிவகுமார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement