dinamalar telegram
Advertisement

மழைக்கு முன் வடிகால் பணிகள்70 சதவீதம் முடிக்க அமைச்சர் உறுதி

சென்னை, சென்னையில் பருவமழைக்கு முன் 70 சதவீதம் வடிகால் பணிகள் மட்டுமே முடிவடையும் என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள, அம்மா மாளிகையில், மாநகராட்சி பள்ளிகளில் 2021 - 22ம் கல்வியாண்டில் படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 285 மாணவர்களுக்கு 67.39 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினர்.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசியதாவது:மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரி கட்ட வேண்டும் என, கமிஷனர் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார்.வருங்காலத்தில், இதுபோன்று துவங்கப்படும் வாய்ப்பு உள்ளது. அவற்றை கவுன்சிலர்களும், மற்றவர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னதாக, 70 சதவீத பணிகள் நிறைவு பெறும்.தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அம்மா உணவகம் வாயிலாக செயல்படுத்த, மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது.இந்த கோரிக்கை ஆய்வில் உள்ளது. முதல்வர் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ அதன்படி திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், ''சென்னை மாநகராட்சி பள்ளியில் 1996ல் மாணவர் சேர்க்கை 50 சதவீதமாக இருந்தது. அதன்பின், படிப்படியாக அதிகரித்து, 2006ல், மாணவர் சேர்க்கை 90 சதவீதமாக இருந்தது.''இது தற்போதைய முதல்வரால் சாத்தியமானது. ஆனால், கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதைபோல், சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மாநகராட்சி கல்வித் துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை, 90 சதவீதமாக உயர்த்தி காட்ட வேண்டும்,'' என்றார். வௌ்ளத்திற்கு தப்புமா சென்னை?

சென்னையில் 4,070.10 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை முழுதும் 1,033.15 கி.மீ., நீளத்துக்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போதைய சூழலில் பருவமழைக்கு முன், 70 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அப்படிப்பட்ட நிலையில், ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் இணைப்பு இல்லாத சூழல் அல்லது அரை குறை பணி காரணமாக, மழை நீர் தேங்க வாய்ப்புள்ளது.ஏற்கனவே மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகள் சேதமடைந்த நிலையில், மழை காலங்களில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும். அதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம். இதனால் மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மாநகராட்சி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, மழை நீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க தயாராவதுடன், சாலையை மக்கள் பயன்படுத்தும் அளவிற்காவது சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement