dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில் ஈரோடுகனகாம்பரம்

கிலோ ரூ.2,130
சத்தியமங்கலம், ஆக. 16-
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ கனகாம்பரம் பூ, 2,130 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் மல்லிகை-437, முல்லை-180, காக்கடா-225, செண்டுமல்லி-43, கோழிகொண்டை-83, சம்பங்கி-140, அரளி பூ-200, துளசி-40, செவ்வந்தி-200, ஜாதி முல்லை-400 ரூபாய்க்கும் விற்பனையானது.
தொழிலாளி தற்கொலை
கோபி, ஆக. 16-
கோபி அருகே கூலி தொழிலாளி, தற்கொலை செய்து கொண்டார்.
கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார், 25, கூலி தொழிலாளி; நேற்று அதிகாலை வீட்டில் துாக்கிட்டு கொண்டார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தந்தை பொன்னுசாமி புகாரின்படி, இறப்புக்கான காரணம் குறித்து, கோபி போலீசார் விசாரிக்கின்றனர். கொடிவேரியில் 11வது நாளாக தடை
கோபி, ஆக. 16-
கொடிவேரி தடுப்பணையில், 11வது நாளாக நேற்றும் தடை தொடர்ந்தது.
பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த, 5ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 3,400 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. ஆனாலும் தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 11வது நாளாக நேற்றும், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மகள் மாயம்; தாய் புகார்
சத்தியமங்கலம், ஆக. 16-
சத்தியமங்கலம் அருகே தாய் வீட்டுக்கு சென்ற பெண் மாயமானார்.
சத்தியமங்கலம் அருகே கெஞ்சனுார், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் குமார். இவரின் மனைவி நிலா, 38; கடந்த, 12ம் தேதி தாளவாடி அருகிலுள்ள தொட்டபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை.
தாய் வீட்டுக்கும் செல்லவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை. இந்நிலையில் மகளை காணவில்லை என்று, சத்தியமங்கலம் போலீசில், தாயார் பார்வதி புகாரளித்துள்ளார். வழக்குப்பதிந்த போலீசார், நிலாவை தேடி வருகின்றனர்.
கரடி தாக்கியதில்
தொழிலாளி படுகாயம்
சத்தியமங்கலம், ஆக. 16- -
கோட்டமாளம் அருகே கரடி தாக்கியதில், மாடு மேய்த்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
கடம்பூர்-கேர்மாளம் இடையுள்ள கோட்டமாளத்தை சேர்ந்தவர் திம்மையன், 45; வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில், நேற்று மாலை மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு கரடி, திம்மையனை துரத்தி வலது காலை கடித்தது.
வலியால் அவர் அலறவே, அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று, கரடியை விரட்டினர். அவவை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
225 பஞ்.,களிலும்
கிராமசபை கூட்டம்
ஈரோடு, ஆக. 16-
மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 225 பஞ்.,களிலும் நேற்று காலை கிராமசபை கூட்டம் நடந்தது. பொது நிதியிலான செலவினம், குடிநீர், ஜல்ஜீவன் திட்டப்பணிகள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதித்தும், அனுமதி வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றினர். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குதல், நீர் நிலைகளை காத்தல், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவை குறித்து விளக்கம் அளித்தனர். அந்தியூர் யூனியன் கூத்தம்பூண்டி கிராமத்தில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், கிராமசபை நடந்தது. 75வது சுதந்திர தினம் கோலாகலம்
காங்கேயம், ஆக. 16-
காங்கேயத்தில், 75வது சுதந்தர தின விழா, அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பொது இடங்களில், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காங்கேயம் யூனியனில், சேர்மன் மகேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றினார். காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் புவனேஸ்வரி கொடியேற்றினார். டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், தன்னார்வ அமைப்பினர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும், தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
துாய்மை பணியாளர்கள்
190 பேருக்கு புத்தாடை
காங்கேயம், ஆக. 16-
காங்கேயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, புத்தாடை வழங்கப்பட்டது.
பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில், நகராட்சி துாய்மை பணியாளர்களை கவுரவிக்கும், நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் மங்களம் ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நகராட்சியில் பணிபுரியும், 160 துாய்மை பணியாளர்களுக்கு, வேட்டி - சட்டை மற்றும் புடவை, 30 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு புடவை வழங்கினார்.
விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சங்கரகோபால், மாவட்ட செயலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கார், பைக்குகள் எரிந்து சேதம்
சத்தியமங்கலம், ஆக. 16-
சத்தியமங்கலம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கார், பைக்குகள் எரிந்து சேதமானது.
சத்தி, அரியப்பம்பாளையத்தில், பெட்ரோல் பங்க் அருகில், ரங்கசாமி என்பவர் டைல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு நேற்று காலை கார் நிறுத்தும் பகுதியில் கரும்புகை கிளம்பியது. இதைப்பார்த்த மக்கள் சத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற அவர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீயில் கார், இரண்டு பைக்குகள் எரிந்து விட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

கரும்பு தோட்டத்தில் தீ
பெருந்துறை, ஆக. 16-
வெள்ளோடு, கே.கே.வலசு, கொளத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் கரும்பு தோட்டத்தில், நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. அருகில் இருந்த சிவகுமார் என்பவரின் கரும்பு தோட்டத்துக்கும் தீ பரவியது.
பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. விரைந்து சென்ற அவர்கள், அக்கம்பக்கத்து காடுகளில் தீ பரவால் தடுத்தனர். குடித்து விட்டு அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட் அல்லது பீடியால் தீப்பிடித்து இருக்கலாம் எனத் தெரிகிறது.

சிவன்மலையில் பொது விருந்து
காங்கேயம், ஆக. 16-
காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நேற்று பொது விருந்து நடந்தது. இதனால் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். உச்சிக்கால பூஜையை தொடர்ந்து, பொது விருந்து நடந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அன்னக்கொடி, கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
திம்பம் மலைப்பாதையில்
கவிழ்ந்த கரும்பு லாரி
சத்தியமங்கலம், ஆக. 16-
திம்பம் மலைப்பாதையில், கரும்பு லாரி கவிழ்ந்த விபத்தில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தாளவாடியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு ஏற்றிய லாரி, திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று மாலை சென்றது. 12வது கொண்டை ஊசி வளைவில், நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். சாலையோரத்தில் லாரி கவிழ்ந்ததால் பெரியளவில் போக்குவரத்தும் பாதிக்கவில்லை.
தாராபுரத்தில்
சுதந்திர தின விழா
தாராபுரம், ஆக. 16-
தாராபுரத்தில், சுதந்திர தின விழா, நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில், ஆணையர் ராமர் கொடியேற்றினார். தலைவர் பாப்புகண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் உள்பட திரளான பங்கேற்றனர். தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் செந்தில்குமார் கொடியேற்றினார். இதேபோல் தாராபுரம் நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார் அலுவலகம் உள்பட பல இடங்களிலும், தேசியக்கொடியேற்றி, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில், சமபந்தி போஜனம் நடந்தது.
பரிசு தொகை உயர்வு
சிதம்பரம் அறிவிப்பு
சென்னை, ஆக. 16-
நாவல் போட்டிக்கான பரிசுத் தொகையை, இரண்டு லட்சமாக உயர்த்தி, 'எழுத்து' அமைப்பின் தலைவரான, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிவித்துள்ளார்.
'எழுத்து' என்ற தமிழ் இலக்கிய அமைப்பை, சிதம்பரம் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் நாவல் போட்டி நடத்தப்படுகிறது. தேர்வு பெறும் சிறந்த நாவலுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
தமிழ் எழுத்தாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், தற்போது வழங்கப்படும் பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாய், 2021ம் ஆண்டுக்கான போட்டியில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, சிதம்பரம் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement