dinamalar telegram
Advertisement

தி.மு.க.,-ஐ.டி., நிர்வாகி அவதூறு கருத்து

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்துகளை பரப்பி வரும், தி.மு.க.,-ஐ.டி., நிர்வாகி மீது நடவடிக்கை கோரி, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், பா.ஜ., வக்கீல் அணி பிரிவு சார்பில் புகார் மனு அளித்தனர்.
பிரதமர் மோடி குறித்து, தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி, சமூக வலைதளத்தில், அவதுாறு கருத்துகளை பரப்பி வருகிறார். இதற்கு கரூர் மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகள், பதிலடி தராமல் மவுனம் காத்து வருவதாக, நேற்று, நமது நாளிதழில் செய்தி வெளியானது.

இதை தொடர்ந்து, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், பா.ஜ., வக்கீல் அணி பிரிவு மாவட்ட தலைவர் உமாதேவி தலைமையில், மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும், 75வது சுதந்திர தின விழா கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில், கரூர் மாவட்ட தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி, கரூர் தொகுதி வலைதள பொறுப்பாளர் ஷாஜகான், பிரதமர் மோடி மீது அவதுாறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
மேலும், தேசிய கொடியை தலை கீழாக அரை கம்பத்தில் பறக்கவிட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே போட்டு, பா.ஜ., தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.
இதுபோன்று அவதுாறு கருத்துகளை பதிவிட்டதற்காக, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் இணைய தளத்தை முடக்கி, அவர் தீவிரவாத செயலில் ஈடுபட்டுள்ளதால், தகுந்த சட்டப் பிரிவுகளின் கீழ், கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement