dinamalar telegram
Advertisement

15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை

நீரேற்று நிலைய குழாய்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால், கரூர் மாநகராட்சி, 15 வார்டுகளில், 15 நாட்கள் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்த நிலைமை சீராக, 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால், தண்ணீரின்றி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சியில், புதிதாக விரிவாக்கப்பட்ட பகுதிகள் சேர்ந்து, 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு, 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 422 பேர் உள்ள மக்கள் தொகைக்கு தினமும், 290.74 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இதில், காவிரி ஆற்றில் நெரூர், வாங்கல், கட்டளை ஆகிய பகுதிகளிலிருந்து, நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால், கட்டளை நீரேற்று நிலைய குழாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், குடிநீர் வினியோகம் சீராக வழங்க, பல நாட்களுக்கு மேல் ஆகும் என தெரிகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட தான்தோன்றிமலை நகராட்சி, சணப்பிரட்டி பஞ்., ஆகிய பகுதிகளுக்கு, கட்டளை நீரேற்று நிலையத்திலிருந்து தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று நிலையம் முழுக்க நீரால் சூழப்பட்டுள்ளதால், மின்சாரம் பயன்படுத்த முடியாத நிலை மற்றும் குழாய் அடித்து செல்லப்பட்டதால், 18 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
தற்போது ஆற்றில் நீர் வடிந்து வரும் நிலையில், நீரேற்று நிலையத்தில் பழுது பார்க்கு பணிகள் துவங்கி உள்ளன.
நீர் வினியோகம் செய்ய குறைந்தது, 10 நாட்களாகும். தற்போது, 15 நாட்களுக்கு மேலாக குடிநீரின்றி, மக்கள் திணறி வருகின்றனர். சில வார்டுகளில் மட்டுமே, மாநகராட்சி சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் தனியார் டேங்கர் லாரிகளில், 4,000 லிட்டர் தண்ணீர், 700 முதல், 850 ரூபாய் வரை விலைக்கு வாங்கு நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, மாநகராட்சி, 14வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் கூறுகையில், ''30 நாட்களுக்கும் மேலாக காவிரி ஆற்று வெள்ளத்தால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கேட்டால், 3வது மண்டல தலைவர் ராஜவை தொடர்பு கொள்ளுங்கள் என, கூறுகின்றனர். ஒவ்வொரு விஷயத்திலும், தி.மு.க., மேயர், மண்டல தலைவர்கள் தலையீட்டால், குடிநீர் கூட முறையாக வினியோகம் செய்ய முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்,'' என்றார்.
இதுகுறித்து, மேயர் கவிதாவிடம் கேட்டபோது, ''தற்போது தண்ணீர் வரத்து குறைந்து வருவதால், நீரேற்று நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்படும். வெள்ள காலத்தில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement