dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில் கரூர்

கஞ்சா விற்ற
பெண் உள்பட

2 பேர் கைது
குளித்தலை, ஆக. 16-
குளித்தலை பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., அழகுராமு மற்றும் போலீசார், நேற்று மதியம், பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த, நெய்தலுார் பஞ்., பெரியபனையூர், இந்திரா நகரை சேர்ந்த சேட்டு மகன் மணிகண்டன், 23; திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, ராம்ஜி நகரை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி உமா, 64, ஆகியோரை கைது செய்து, 1.100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
குளித்தலை, தோகைமலை யூனியன்
33 பஞ்.,ல் சிறப்பு கிராம சபை கூட்டம்
குளித்தலை, ஆக. 16-
குளித்தலை அடுத்த, பொய்யாமணி பஞ்., பாலன், குமாரமங்கலம் பஞ்., ஆலமரத்தடியில் தலைவர் மகேந்திரன், இனுங்கூர் பஞ்., தலைவர் குமார், நல்லுார் பஞ்., தலைவர் கலா குணசேகரன், இரணியமங்கலம் பஞ்., ரம்யா சரவணன், சத்தியமங்கலம் பஞ்., தலைவர் பாப்பாத்தி பிச்சை, வதியம் பஞ்., தலைவர் குணாலன், கூடலுார் பஞ்., தலைவர் அடைக்கலம் ஆகியோர் தலைமையில், 75வது சுதந்தர தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இதேபோல், குளித்தலை, தோகைமலை யூனியன், 33 பஞ்.,ல் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பஞ்., செயலாளர்கள், யூனியன் அலுவலர்கள், வருவாய்த்துறை, பொது சுகாதார துறை, வேளாண்மை துறை அலுவலர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்
பரிசு தொகை உயர்வு: சிதம்பரம் அறிவிப்பு
சென்னை, ஆக. 16-
நாவல் போட்டிக்கான பரிசுத் தொகையை, இரண்டு லட்சமாக உயர்த்தி, 'எழுத்து' அமைப்பின் தலைவரான, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிவித்துள்ளார்.
'எழுத்து' என்ற தமிழ் இலக்கிய அமைப்பை, சிதம்பரம் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் நாவல் போட்டி நடத்தப்படுகிறது. தேர்வு பெறும் சிறந்த நாவலுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
தமிழ் எழுத்தாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், தற்போது வழங்கப்படும் பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாய், 2021ம் ஆண்டுக்கான போட்டியில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, சிதம்பரம்
அறிவித்துள்ளார்.
திருக்காம்புலியூரில் கிராம சபை கூட்டம்
கிருஷ்ணராயபுரம், ஆக. 16-
மேட்டு திருக்காம்புலியூர் அரசு பள்ளி வளாகத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. பஞ்., தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார்.
இதில் பஞ்சாயத்து பகுதியில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். மேலும், சுற்றுபுறத்துாய்மை, மரக்கன்றுகள் நடுதல், கொசு ஒழிப்பு ஆகிய பணிகள் குறித்து பேசப்பட்டது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, யூனியன் கமிஷனர் தவமணி, யூனியன் அலுவலர்கள், அரசு பணியாளர்கள், மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு கிராம சபை கூட்டம்
கலெக்டர் பங்கேற்பு
கரூர், ஆக. 16-
கரூர் மாவட்டம், ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்.,ல் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் செல்லையா சிவா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:
பள்ளி மாணவ, மாணவியர் இடைநிற்றலை தவிர்த்து, உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும். மேலும், கல்லுாரி படிக்கும் மாணவியருக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல், மலேரியா நோயை தடுப்பதற்கு, வீடுகளை சுற்றி தேவையில்லாமல் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம்.
மேலும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு வேண்டுபவர்கள், பாலம் திட்டத்தில் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
புறவழிச்சாலையில் லாரி 'பார்க்கிங்'
நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர், ஆக. 16-
திருச்சி புறவழிச்சாலையில் லாரி, 'பார்க்கிங்' காரணமாக நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கரூர்--திருச்சி புறவழிச்சாலையில் வீரராக்கியம், வெங்கக்கல்பட்டி ஆகிய இடங்களில் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது.
வெங்கக்கல்பட்டி அணுகுசாலை வழியாக கலெக்டர் அலுவலகம், தான்தோன்றிமலை வந்து கரூருக்குள் வாகனங்கள் வந்து செல்கின்றன. மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணுகு சாலையை மறைத்து, லாரிகளை நிறுத்தி செல்கின்றனர். கனரக வாகனங்களான லாரிகள் சாலையில் அதிக அளவில் நிற்பதால், அணுகு சாலைக்கு வரவேண்டிய வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், லாரிகளை பார்க்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். லாரிகளை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
லாட்டரி விற்ற
முதியவர் கைது
குளித்தலை, ஆக. 16-
குளித்தலை அடுத்த, கடவூர் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, பாலவிடுதி போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, கடவூர் நடுத்தெருவை சேர்ந்த கந்தசாமி, 70, என்பவர் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

மூதாட்டியிடம்
செயின் பறிப்பு
கரூர், ஆக. 16-
கரூரில், வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்க செயினை பறித்துச் சென்ற சம்பவம், பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே, நெரூர் வடபாகம், கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயம்மாள், 70. இவர், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டில் நுழைந்த மர்ம நபர், ஜெயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, வாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவம் அரங்கேறி வருவதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

கஞ்சா விற்ற
வாலிபர் கைது
குளித்தலை, ஆக. 16-
குளித்தலை அடுத்த, கொம்பாடிபட்டியில், கஞ்சா விற்பனை செய்வதாக லாலாப்பேட்டை போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொம்பாடிபட்டியை சேர்ந்த ஜோசி சந்துரு, 20, என்பவர், 200 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. ஜோசி சந்துருவை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பஸ் கண்டக்டர், பயணியை தாக்கிய 2 பேர் கைது
கரூர், ஆக. 16-
கரூரில் அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டர், பயணியை தாக்கிய, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூரிலிருந்து, கோவையை நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது, கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்சை பின் தொடர்ந்து டூவீலரில், கரூர் ராமனுாரை சேர்ந்த பிரபு, 27, இவரது நண்பர்கள் வந்துள்ளனர். அப்போது கரூர் சுங்ககேட் அருகே பஸ்சை வழிமறித்துள்ளனர். பஸ் கண்டக்டர் காளிதாஸ், 40, என்பவர் தட்டி கேட்டுள்ளார்.
அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை தாக்கியுள்ளனர். இதனை பஸ்சில் பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோவர்தன் என்பவர் தட்டி கேட்டுள்ளார். அவரையும், கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கோவர்தனை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபு மற்றும் அவரது நண்பர் பாக்கியராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணதாசனை தேடி வருகின்றனர்.
கம்யூ., ஒன்றிய செயலாளருக்கு மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு

குளித்தலை, ஆக. 16-
குளித்தலை அடுத்த, லாலாப்பேட்டையை சேர்ந்தவர் தர்மலிங்கம், 50. இவர், கிருஷ்ணாபுரம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளார்.
நேற்று முன்தினம், பழைய ஜெயங்கொண்டம், நாலு ரோடு பகுதியில் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, எம்.புதுப்பட்டியை சேர்ந்த மூட்டை துாக்கும் தொழிலாளிகள் கருணாகரன், 33, சஞ்சீவி ஆகிய இருவரும், கட்சியினரையும், ஒன்றிய செயலாளரையும் தகாத வார்த்தையில் பேசி, திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement