ஸ்மார்ட் சிட்டி திட்ட குறைபாடு அறிக்கை வந்ததும் நடவடிக்கை: அமைச்சர் நேரு
நகராட்சி உள்ளாட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் நேரு தலைமை யில் ஈரோட்டில் நடந்தது.
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்குப்பின் அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறியதாவது: நகராட்சி, மாநகராட்சி கட்டடங்களில் வாடகை செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில், பல்வேறு குறைபாடு, முறைகேடு புகார் எழுந்தது. ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையிலான குழு விசாரிக்கிறது.
அதுபோல உள்ளாட்சி துறை முறைகேடு குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இதுகுறித்த அறிக்கை வரப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் துறை சார்ந்த நடவடிக்கை குறித்து விசாரணை நடந்து வருகிறது. நகர்புற
உள்ளாட்சி மேம்பாட்டுக்காக கடந்தாண்டு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி நடக்கிறது. நடப்பாண்டுக்கும், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டுக்கான ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டப்பணிகளில் ஏற்பட்டுள்ள குறைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
எம்.பி.,க்கள் கணேச மூர்த்தி, சுப்பராயன்,
அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் திருமகன் ஈவெரா, சரஸ்வதி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மேயர் நாகரத்தினம் உட்பட பலர்
பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!