அ.குறிச்சி தபால் நிலையத்தில் சேமிப்பு: கணக்கிற்கு ரசீது தராமல் இழுத்தடிப்பு
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்களும், அரசு ஓய்வு ஊழியர்களும் வங்கிக்கு அடுத்தபடியாக, தபால் நிலையங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். புதிதாக கணக்கு துவங்க அரவக்குறிச்சி போஸ்ட் ஆபீசை அப்பகுதி மக்கள் நாடும்போது, மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு சேமிப்பு கணக்கு புத்தகம் அல்லது ஒப்புகை சீட்டு ஏதும் வழங்காமல், நாள் கணக்கில் அலைக்கழிக்கின்றனர்.
இதனால், பணத்தை கொடுத்து விட்டு எவ்வித ஆவணமுமின்றி, பரிதாபமாக வீடுகளுக்கு திரும்பும் நிலை உள்ளது. மேலும், முதிர்வு கணக்குகளை சரிபார்க்க வருபவர்களிடமும் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டு, தங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது, சென்று வாருங்கள் என இழுத்தடிக்கின்றனர்.
இதுகுறித்து, பணியிலிருந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜேந்திரன் கூறியதாவது:
என்னுடைய ஓய்வூதிய தொகை, 50 ஆயிரம் ரூபாயை அரவக்குறிச்சி தபால் நிலையத்தில், டிபாசிட் செய்ய சென்ற போது, என்னிடம் பணத்தை பெற்றுக் கொண்டனர். ஒரு வாரத்துக்கு மேலாக அதற்கு கணக்கு புத்தகம், ரசீது ஏதும் தராமல் இழுத்தடித்தனர்.
என்னுடைய வற்புறுத்தலின் காரணமாக, பெறப்பட்ட, 50 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வாரம் கழித்து, ஒரே படிவமாக தராமல் தனித்தனியாக ஆயிரம் ரூபாய் வீதம், 50 தனித்தனி கணக்குகள் நான் தொடங்கியுள்ளதாக ரசீதுகளை கொடுத்துள்ளனர். இதனால் முதிர்வு தொகை பெறும்போது, வயதான காலத்தில் நான் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவேன்.
இதுகுறித்து, நான் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டபோது, சரியான பதில் கூறாமல் உதாசீனப்படுத்தினார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!