dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில் கரூர்

கி.புரத்தில் பா.ஜ., சார்பில்
தேசியக்கொடி வினியோகம்

கிருஷ்ணராயபுரம், ஆக. 14-
நாட்டின், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கிருஷ்ணராயபுரம் பா.ஜ., சார்பில், மக்களுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி நடந்தது. இதில், லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, வேங்காம்பட்டி, சிந்தலவாடி, கருப்பத்துார், பிள்ளபாளையம், வல்லம் ஆகிய கிராமங்களில், பா.ஜ.,வினர் மக்களுக்கு தேசியக்கொடி வினியோகித்தனர்.

டி.என்.பி.எல்., சார்பில்
கோவில்களுக்கு நிதி
கரூர், ஆக. 14-
டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில், கோவில் கட்டமைப்பு பணிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி, ஆலை வளாகத்தில் நடந்தது.
அதில், சமுதாய நலப்பணிகள் திட்டத்தில், ஆலையை சுற்றியுள்ள கிராமங்களான மறவாப்பாளையம், கரியாம்பாளையம் ஆகிய கிராமங்களில், நான்கு கோவில்களுக்கு, கட்டமைப்பு பணிகளுக்காக, 95 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
அப்போது, டி.என்.பி.எல்., ஆலை மனித வளத்துறை பொது மேலாளர் சுரேஷ், முதுநிலை பொது மேலாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

லாட்டரி விற்ற
5 பேர் கைது
குளித்தலை, ஆக. 14-
குளித்தலை அடுத்த, கடவூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, பாலவிடுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில், சோதனையில் ஈடுபட்ட போலீசார், லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த பாலசுப்பிரமணியன், 55, என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் லாட்டரி விற்ற, கடவூர் நடுத்தெருவை சேர்ந்த சரவணன், 51, ஆறுமுகம், 55, தண்ணீர்பள்ளி சேடர் தெருவை சேர்ந்த ரமேஷ், 47, பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்த மதன், 30, ஆகியோரை பாலவிடுதி, குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

மொபட்டிலிருந்து தவறி
விழுந்த தொழிலாளி பலி
குளித்தலை, ஆக. 14-
குளித்தலை அடுத்த, இடையப்பட்டி பஞ்., புங்கம்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 43; இவர், 'டி.வி.எஸ்' மொபட்டில், கடந்த, 6ல் செல்லாண்டிபுரம் நோக்கி சென்றார். சிந்தாமணிப்பட்டி-வரவனை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, வரவனை கோவில் அருகே, சாலையோரம் நடப்பட்டிருந்த, 'மைல்கல்' மீது மொபட் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சுப்பிரமணி பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த சுப்பிரமணி இறந்தார்.
இதுகுறித்து, அவரது மகன் தினேஷ், 22, கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பிச்சம்பட்டி வாய்க்காலில்
படித்துறை படிகள் சேதம்
கிருஷ்ணராயபுரம், ஆக. 14-
பிச்சம்பட்டி கிராமத்தில், வாய்க்கால் படித்துறை சேதத்தால், மக்கள் வாய்க்காலில் நின்று குளிக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள வாய்க்கால், மாயனுார் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து, திருச்சி வரை செல்கிறது. இந்த வாய்க்காலில், பிச்சம்பட்டி பகவதியம்மன் கோவில் அருகே, படித்துறை கட்டப்பட்டுள்ளது.
இதனால், பிச்சம்பட்டி கிராம மக்கள் வாய்க்காலில் நின்று குளிக்க, துணிகள் துவைக்க வசதியாக இருந்தது. தற்போது படிகள் சேதமாகி உடைந்துள்ளன. இதனால், வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்ற போதும், மக்கள் வசதியாக நின்று குளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே, இந்த படித்துறையின் உடைந்து படிகளை சரி செய்ய, பஞ்சாயத்து நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வயலுார் கிராமத்தில் கம்பு சாகுபடி தீவிரம்கிருஷ்ணராயபுரம், ஆக. 14-
திருமேனியூர் கிராமத்தில், கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்.,க்குட்பட்ட திருமேனியூர், சரவணபுரம், பாம்பன்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக, கம்பு பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்களுக்கு, கிணற்று நீர்பாசன மூலம், தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது, கிணற்றில் போதுமான நீர் இருப்பதால், பயிர்களுக்கு பற்றாக்குறையின்றி தண்ணீர் கிடைத்தது. பயிர்கள் பசுமையாக வளர்ந்து, பூட்டை பிடித்து விளைச்சல் கண்டுள்ளது. இன்னும் சில நாட்களில், பயிர்கள் அறுவடை செய்யப்படும் என, விவசாயிகள் கூறினர்.

குழாயில் விரிசல்: வீணாகும் தண்ணீர்
கிருஷ்ணராயபுரம், ஆக. 14-
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை அருகே, சிந்தலவாடி பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் தேங்கி, பள்ளமாக மாறி விட்டது.
இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது பெறும் அவதிப்படுகின்றனர். எனவே, உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய, பஞ்., நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திர தின விழாவுக்கு
அரசு மைதானத்தில்
ஏற்பாடு தீவிரம்
கரூர், ஆக. 14-
சுதந்திர தினத்தையொட்டி, கரூர் மாவட்ட அரசு மைதானத்தில், முன்னேற்பாடுகள் நேற்று நடந்தன.
நாட்டின், 75வது சுதந்திர தின விழா, நாளை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நாடு முழுவதும் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கரூர் மாவட்ட அரசு விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழாவை, சிறப்பாக கொண்டாட நேற்று ஏற்பாடுகள் நடந்தது. அங்கு, அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் கலெக்டர் பிரபு சங்கர், நாளை காலை, 9:05 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார்.
இதனால் நேற்று காலையிலிருந்து, அரசு விளை ட்டு மைதானத்தில் மேடை அமைக்கும் பணியும், போலீஸ் அணிவகுப்புக்கான ஒத்திகையும் நடந்தது.
கள்ளக்காதலன் மிரட்டல்
கணவர் போலீசில் புகார்
குளித்தலை, ஆக. 14-
குளித்தலை அடுத்த, ரங்கநாதபுரம் பஞ்., நத்தமேட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 45; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பிரிந்து, அதேபகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் செல்வத்துடன் வாழ்ந்து வருகிறார்.
கடந்த, 9ல், பாலசுப்பிரமணி, தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வம், பாலசுப்பிரமணியை தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, பாலசுப்பிரமணியம் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

ஆடு, கோழி
விற்பனை மந்தம்
கிருஷ்ணராயபுரம், ஆக. 14-
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சந்தையூரில் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகிறது. இந்த சந்தையில் ஆடு, கோழி, காய்கறிகள் விற்கப்படுகின்றன.
இந்தவாரம், குறைந்தளவே ஆடுகளை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆடு ஒன்று, 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழி கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமங்களில் திருவிழா முடிந்ததால், ஆடு, கோழி விற்பனை மந்தநிலையில் இருந்தது.
பாலுாட்டல் விழிப்புணர்வு
கரூர், ஆக. 14-
கரூர் செயின்ஸ் அறக்கட்டளை சார்பில், உலக தாய் பாலுாட்டல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் நடந்தது.
அதில், தாய் பாலுாட்டல் குறித்த சந்தேகங்கள் குறித்து, டாக்டர் பாரதியும், தாய்பாலின் முக்கியத்துவம் குறித்து, அறக்கட்டளை தலைவர் கவிதாவும் பேசினர். மேலும், 60 கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மருத்துவமனை ஊழியர்கள், ஜெய்ராம் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்றனர்.
பா.ஜ., மகளிர் அணியினர்
தேசியக்கொடி அணிவகுப்பு
குளித்தலை, ஆக. 14-
குளித்தலையில், பா.ஜ., மகளிரணி சார்பில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக்கொடி ஏந்தி, அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் பா.ஜ., மாநில மகளிர் அணி துணை தலைவர் மீனா வினோத்குமார் தலைமை வகித்தார். குளித்தலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்து, பா.ஜ., அலுவலகத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டில் உள்ள காந்தி சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் குளித்தலை நகர தலைவர் கணேசன், பொதுச்செயலாளர்கள் கண்ணன், ஸ்ரீதர் ராஜப்பன், பொருளாளர் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement