dinamalar telegram
Advertisement

கட்டடங்களுக்கு போலி அனுமதி பெற்று தரும் ஏஜென்டுகள் ஓசூர் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி; மக்களே உஷார்

ஓசூர் மாநகராட்சியில், வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும், போலியாக கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வங்கிகளில் கடன் பெற்று தரும் பல ஏஜென்டுகள் போலி ஆவணங்கள் தயார் செய்து, போலி சான்று பெற்று தருவதாக புகார் எழுந்துள்ளது.
ஓசூர் மாநகராட்சியில் மொத்தம், 85 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இதில், 300 க்கும் மேற்பட்ட தனியார் லே அவுட்டுகள் அடக்கம். உரிய அனுமதி பெறாத தனியார் லே அவுட்டுகளில், 2016க்கு முன் பிளாட் வாங்கி மக்கள் பதிவு செய்திருந்தால், மாநகராட்சியில் வரன்முறை கட்டணம் செலுத்தி, பிளாட்டை அப்ரூவல் செய்து கொள்ள முடியும்.

உதாரணமாக, இரண்டரை சென்ட் நிலத்திற்கு, 65 ஆயிரம் ரூபாய் வரன்முறை கட்டணம் செலுத்தினால், நிலத்திற்கு மாநகராட்சியின் அப்ரூவல் கிடைத்து விடும். அதன் பின், கட்டட அனுமதி பெற்று வீடு அல்லது வணிக வளாகம் கட்டி கொள்ளலாம். இது தான் விதிமுறை.
ஆனால், 2016க்கு பின் பிளாட்டுகள் வாங்கியிருந்தால், அதை மாநகராட்சியிடம் அப்ரூவல் செய்ய முடியாது. அதில் வீடு, வணிக வளாகம் எது கட்டினாலும் அது விதிமுறை மீறலாக தான் பார்க்கப்படும். அதை இடிப்பதற்கு கூட மாநகராட்சி நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட துறைக்கு அதிகாரம் உள்ளது.
இதை அறியாத மக்கள், ஓசூர் பகுதியில் கடந்த, 2016 க்கு பின், உரிய அனுமதி பெறாத லே அவுட்டுகளில் பிளாட்டுகளை வாங்கி, அதை மாநகராட்சியில் அப்ரூவல் செய்ய முடியாத சூழ்நிலை தற்போதும் உள்ளது. இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்ளும், வங்கியில் கடன் பெற்று தரும் ஏஜென்டுகள், இன்ஜினியர்கள், மாநகராட்சி பிளாட் அப்ரூவல் மற்றும் கட்டட அனுமதி பெற்று தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொள்கின்றனர்.
ஆனால், 2016க்கு பின் ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்ட நிலத்திற்கு, மாநகராட்சி மூலம் பிளாட் அப்ரூவல் மற்றும் கட்டட அனுமதி பெற முடியாது என்பதால், போலியாக பிளாட் அப்ரூவல் மற்றும் கட்டட அனுமதியை பெற்ற சான்றுகளை, ஏஜென்டுகள் மற்றும் இன்ஜினியர்கள் கொடுப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதில் மாநகராட்சி கமிஷனர் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மாநகராட்சியின் அப்ரூவல் பெற்ற இடத்தில், வீடு மற்றும் வணிக வளாகம் கட்ட, வங்கி கடனை எதிர்பார்த்து பலர் உள்ளனர். இப்படிபட்டவர்களை வங்கிகளில் கடன் பெற்று தரும் ஏஜென்டுகள் தொடர்பு கொண்டு, போலியாக மாநகராட்சி கட்டட அனுமதியை வழங்கி பணம் பார்க்கின்றனர்.
இப்படிப்பட்ட ஏஜென்டுகள் மற்றும் இன்ஜினியர்களை, மாநகராட்சி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு பிரச்னை வருமோ என பயந்து, மாநகராட்சியிடம் தகவல் தெரிவிப்பதில்லை. மாநகராட்சிக்கு வர வேண்டிய வருவாயும் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை. இதனால், மாநகராட்சி நிர்வாக நகரமைப்பு பிரிவு அதிர்ச்சியடைந்து, ஓசூர் டவுன் போலீசில் கடந்த மார்ச், 5ல், போலி கட்டட அனுமதி வழங்கப்படுவதாகவும், குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என கூறி, புகார் செய்துள்ளது.
இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிர
மணியன் கூறுகையில், ''எழுத்துப்பூர்வமாக யாரும் புகார் செய்யவில்லை. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த தகவலை தெரிவித்துள்ளோம். ஆன்லைன் மூலமாக கட்டட அனுமதியை பெறலாம். இதுபோன்ற போலி கட்டட அனுமதி கொடுப்பது தெரிந்ததால், இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement