dinamalar telegram
Advertisement

வளர்ச்சி பணிகள் பாதியில் நிறுத்தம்; மக்கள் அதிருப்தி

ADVERTISEMENT
வால்பாறை:வால்பாறை நகராட்சியில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள்அதிருப்தியில் உள்ளனர்.வால்பாறை நகராட்சியில்,கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் துவங்கப்பட்டன. குறிப்பாக, சுற்றுலா பயணியரை மகிழ்விக்க நகராட்சி சார்பில், 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லமும், 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்காவும் அமைக்கும் பணி நடந்தது.பணி நிறைவடைந்த நிலையிலும், சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்கு திறந்துவிடாமல் உள்ளது. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் விரக்திஅடைந்துள்ளனர்.இதே போல், எழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், காமராஜ் நகர் பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியும், எஸ்டேட் ரோடுகள் சீரமைப்பு பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. சில பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.இதனிடையே, வால்பாறை நகர மன்றக்கூட்டத்தில், மக்கள் நலன் கருதி வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. நகராட்சியில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறுவதில்லை.வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நகராட்சி நிர்வாகத்தின் மீது, பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.மக்கள் கூறியதாவது:நகராட்சியில், மக்கள் வரிப்பணம் பல கோடி வீணடிக்கப்படுகிறது. சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட பூங்கா, படகு இல்லம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தற்போது பெய்யும் மழைக்கு இடிந்த தடுப்புச்சுவர் கூட கட்டப்படவில்லை. கிடப்பில் உள்ள வளர்ச்சிப்பணிகளை செய்யவும், கட்டி முடிக்கப்பட்ட பூங்கா, படகு இல்லத்தை திறக்கவும், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

பொதுப்பணித்துறையால் சிக்கல்!

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை நகராட்சி சார்பில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தாவரவியல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடத்தை பொதுப்பணித்துறையினர் நகராட்சி வசம் இதுவரை முறையாக ஒப்படைக்கவில்லை.இதே போல், படகு இல்லம் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில், சோலையாறு அணைக்கு செல்லும் தண்ணீரை தடுத்து, படகு இல்லம் கட்டியதற்கு பொதுப்பணித்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement