dinamalar telegram
Advertisement

பாதியில் நிறுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காப்பாற்றுங்க! பாலாற்றில் வெட்டிய மரங்கள் அகற்றாத அவலம்

ADVERTISEMENT
உடுமலை:உடுமலை, பாலாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதோடு, வெட்டப்பட்ட மரங்கள், 5 மாதமாகியும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே, பாலாற்றை முழுமையாக மீட்கவும், துார்வாரி, தடுப்பணைகள் கட்டவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை திருமூர்த்தி மலையில், உருவாகும் சிற்றாறுகள் ஒருங்கிணைந்து, பாலாறாக மாறி, மேற்குநோக்கி, 40 கி.மீ., துாரம் பயணிக்கிறது.
துணை ஆறாக, நல்லாறு மற்றும் ஆனைமலை வரை உள்ள மலைத்தொடர்களிலிருந்து உருவாகும் ஓடை, சிற்றாறுகளும் இணைந்து, மிகப்பெரிய நீர் வழித்தடமாக இருந்தது.பசுமை சூழ்ந்த மலைகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மத்தியில், பாலாறு ஓடுவதால், விவசாயம் மற்றும் வழியோரத்திலுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, குடிநீருக்கான நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.திருமூர்த்தி அணை கட்டப்பட்டதால், பாலாறு, நல்லாற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், பருவ மழை காலங்களில், பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

மாயமான ஆறு
உடுமலை பகுதியில் மேற்கு நோக்கி பாயும், ஒரே நீர் வழித்தடமாக உள்ள, பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகள், இரு புறமும், பல மீட்டர் துாரத்திற்கு வழி நெடுகிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, மிகவும் குறுகலாக மாறியுள்ளது.பல இடங்களில், நீரோட்டத்தை மறிக்கும் வகையில், முழுமையாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர் வழித்தடம் மாயமான நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததாலும், நீர் செல்லும் பாதை முழுவதும் சீமைக்கருவேலன் மரங்கள் வளர்ந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது.இதனால், மழைக்காலங்களில் வழியோர கிராமங்களில், வெள்ள நீர் புகுந்தும், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. மழையில்லாத போது, இரு புறமும் உள்ள கிணறு, போர்வெல் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு, இப்பகுதிகள் கடும் வறட்சியை சந்திக்கின்றன.எனவே, அழிந்து வரும் பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, நீர் வழித்தடங்களை மீட்கவும், பருவ மழை காலங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமிக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, 5 ஆண்டுக்கு முன், பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்து, எல்லைக்கற்கள் நடப்பட்டன. ஆற்றை ஆக்கிரமித்துள்ள மரங்களுக்கு குறியீடு அமைக்கப்பட்டது. அப்போதும், 40 கி.மீ., துாரமும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை.

கிடப்பில் பணி
இந்நிலையில், நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, போலீசார் உள்ளிட்ட அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, மாவட்ட அளவில் சிறப்பு குழு அமைத்து, உடனடியாக அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஒவ்வொரு மாதமும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.அதன் அடிப்படையில், நீண்டஇழுபறிக்குப்பின், கடந்த, ஏப்., மாதம் பாலாற்றின் ஆக்கிரமிப்புகளும் அகற்றும் பணி துவங்கியது. அணையிலிருந்து, பழைய பாலாறு வழித்தடத்தில், சாம்பல் மேடு பகுதியில், 300 மீட்டர் நீளத்தில், ஆக்கிரமித்து இருந்த, 400க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அகற்றப்பட்டன.தொடர்ந்து ஒரு சில நாட்கள் மட்டும் பணி நடந்த நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கிடப்பில் போடப்பட்டது.மேலும், வெட்டப்பட்ட மரங்கள், 5 மாதமாகியும் அப்புறப்படுத்தாமல், பாதி அறுக்கப்பட்ட நிலையில், நீர் வழிப்பாதையில் ஆங்காங்கே சாய்ந்து கிடக்கின்றன.மரங்கள் உயிருடன் இருந்ததை விட, தற்போது ஆற்றின் நீர் வழிப்பாதையை முழுமையாக மறித்தும், மரங்கள் காய்ந்து கிடக்கிறது. இதனால், ஆற்றில் நீர் செல்ல வழியில்லாமல், கடும் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மேலும், 40 கி.மீ., துாரத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், பெயரளவிற்கு குறைந்த துாரத்திற்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், அரசுத்துறை அதிகாரிகளைக்கொண்ட தனி குழு அமைத்து, 40 கி.மீ., துாரம் அமைந்துள்ள பாலாற்றின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.தொடர்ந்து, பாலாற்றின் நீர் வழிப்பாதை முழுவதையும், கன ரக வாகனங்களைக்கொண்டு முழுமையாக துார்வாரி, மண், முட்புதர்களை அகற்றி, எளிதில் நீர் செல்லும் வகையில், துார்வார வேண்டும்.வழியோர கிராமங்கள் பயன்பெறும் வகையில், தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்கவும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாதவாறு, வெள்ள தடுப்புசுவர்களும் குறிப்பிட்ட பகுதிகளில் அமைக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement