dinamalar telegram
Advertisement

டெல்டாவில் இலக்கை தாண்டியது குறுவை சாகுபடி

ADVERTISEMENT
தஞ்சாவூர்:டெல்டா மாவட்டங்களில், இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி நடந்துள்ளது.காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலுார், அரியலுார் ஆகிய மாவட்டங்களில், ஆண்டுதோறும் குறுவை பருவத்தில், 3.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும்.மேட்டூர் அணையில் இருந்து, இந்த ஆண்டு மே 24ம் தேதியே, பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இலக்கு நிர்ணயம்



இதையடுத்து, தஞ்சாவூர், 1.75; திருவாரூர், 1.50 லட்சம்; நாகை, 32 ஆயிரத்து 800; மயிலாடுதுறை, 91 ஆயிரத்து 390; கடலுார், 27 ஆயிரம்; அரியலுார், 2,500 ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு, நடவு முறையில், 1.77 லட்சம்; திருவாரூரில், 1.53 லட்சம், நாகையில், 42 ஆயிரத்து 990; மயிலாடுதுறையில், 93 ஆயிரத்து 538 ஏக்கர் என, இலக்கை மிஞ்சிய சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தட்டுப்பாடு



நாகை மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குறுவை பருவத்தில், 10 ஆயிரம் ஏக்கர் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்தாண்டில், 3.85 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. 'இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாகவே திறக்கப்பட்டதாலும், 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தியதாலும், டெல்டாவில், 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடந்துள்ளது' என்றார்.
குறுவை பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில், யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., போன்ற உரங்களை, அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.உரத்தை பதுக்கி வைத்து, செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்துபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement