dinamalar telegram
Advertisement

75வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு சென்னை தயார் கொண்டாட்டம்! வீடு தோறும் தேசிய கொடியேற்ற மக்கள் எழுச்சி

ADVERTISEMENT
நம்நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெறும், 'சுதந்திர அமுத பெருவிழா'வை கொண்டாட, சென்னை மாநகர் முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், முக்கிய சந்திப்புகளில் தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, வீடுகள்தோறும் கொடியேற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இதனால், கடைகளில் மூவர்ணக்கொடி விற்பனை களைகட்டியுள்ளது.நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு பெறுவதை 'சுதந்திர அமுத பெருவிழா'வாக பிரமாண்டமாக கொண்டாட மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டன. சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாட, நாளை முதல் ஆக., 15ம் தேதி வரை, மூன்று நாட்கள், அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, பல்வேறு மாநிலங்களும், சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றன.

பிரதமரின் அழைப்பை ஏற்று, 'சென்னையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்' என, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், அரசு அலுவலகங்கள், பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும். தேசிய கொடி ஏற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.சமூக பங்களிப்பு நிதிஅதேபோல், தன்னார்வலர்கள், சமூக பங்களிப்பு நிதியின் வாயிலாக, சென்னையை அலங்கரிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், அண்ணா வளைவு, அண்ணா நகர் ரவுண்டானா முதல் திருமங்கலம் வரை உள்ள மின் கம்பங்கள், மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.அதேபோல், சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மின் கம்பங்களிலும், மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மத்திய கைலாஷ் உள்ளிட்ட பல பகுதிகளில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. விளம்பர அனுமதிஇதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் வீடுகளிலும், மூவர்ண கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.குறிப்பாக, மாநகராட்சி பூங்காக்கள், கட்டடங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவற்றில், தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்க அனுமதி வழங்கப்படுகிறது.அவ்வாறு செய்வோர், சிறிய அளவில் தங்கள் நிறுவன விளம்பரங்கள் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படும். இதற்கு, மாநகராட்சி வட்டார துணை கமிஷனர்கள், மண்டல அலுவலர்களிடம் அனுமதி பெற்று கொள்ளலாம்.மக்கள் ஆர்வம்வியாபாரிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உள்ளிட்டோர், தங்கள் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், அந்தந்த வார்டு உதவி பொறியாளர், காவல் துறை அனுமதி பெற்று நிகழ்வை நடத்தலாம்.மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளிலும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னையில், தி.நகர், வண்ணாரப்பேட்டை, பிராட்வே உள்ளிட்ட வணிகம் சார்ந்த பகுதிகளில், தேசிய கொடிகள், பேட்ஜ்கள், தொப்பிகள் விற்பனை சூடுபிடித்து உள்ளது.தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் வாயிலாகவும் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. தேசிய கொடியை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வீடுகளில் நாளை முதல் தேசிய கொடி ஏற்ற தயாராகி வருகின்றனர். இன்று தேசிய கொடி விற்பனை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்ப்பதால், கடைக்காரர்களும் தயார் நிலையில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

கிராமிய கலை நிகழ்ச்சி

சுதந்திர தினத்தையொட்டி, மெட்ரோ ரயில் நிலையங்களில் கரகாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து, மதுரை தி.சோமசுந்தரம் குழுவினரின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த கலை நிகழ்ச்சிகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதிர்வேதி இன்று துவங்கி வைக்கிறார்.வரும் 13ம் தேதி விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும், 14ல் கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம், 15ல் அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மாலை 6:௦௦ மணி முதல் இரவு 8:௦௦ மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் நடக்கும் இந்த நிகழ்வை அனைத்து மக்களும் கண்டு மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.




- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement