சென்னை, ''கிண்டி, மடுவாங்கரையில் ஏற்படும் வெள்ள பாதிப்பு மற்றும் கழிவு நீர் பிரச்னைக்கு, ஆறு மாதத்தில் தீர்வு கிடைக்கும்,'' என, அமைச்சர்கள் நேரு மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சி 172வது வார்டு, கிண்டி, மடுவாங்கரையில், 3.27 கோடி ரூபாயில், புதிய கழிவு நீர் உந்து சக்தி நிலையம் மற்றும் 1.7 கி.மீ., கழிவு நீர் குழாய் பதிக்கப்படுகிறது.வேளச்சேரி ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, 4.08 கோடி ரூபாயில் புதிய கட்டமைப்பு அமைக்கப்படுகிறது. இரண்டு பணிகளுக்கான பூமி பூஜை, கிண்டியில் நேற்று நடந்தது.நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேசியதாவது:சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட, 42 பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும், 13 பகுதிகளில், 352 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் வாயிலாக, 8 லட்சம் மக்கள் பயன் அடைவர். செம்மஞ்சேரியில், 44 கோடி ரூபாய்க்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. மடுவாங்கரையில், கழிவு நீர் உந்து சக்தி நிலையம் அமைப்பதால், ஆறு மாதத்தில், கிண்டியில் ஏற்படும் கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: ஆலந்துார் பகுதியில் இருந்து மழை நீர் வருவதால், நீண்ட காலமாக கிண்டி, மடுவாங்கரையை சுற்றி வெள்ள பாதிப்பு உள்ளது. இதனால், கழிவு நீர் பிரச்னையும் ஏற்பட்டது. தற்போது, 24 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி நடைபெறுகிறது. இரு திட்டங்களும் ஆறு மாதத்தில் முடிவடையும், இதனால், மடுவாங்கரை சுற்றுவட்டார பகுதியில் ஏற்படும், வெள்ள பாதிப்பு, கழிவு நீர் பிரச்னைக்கு விடிவு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, அடையாறு மண்டலக்குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கிண்டியா, பெசன்ட் நகரா?
அடையாறு மண்டலத்தில், 170 முதல் 182 வரை வார்டுகள் இருந்தன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முதல் 168 முதல் 180 வரை வார்டுகள் என மாற்றப்பட்டன. இந்த வரிசையில், கவுன்சிலர்கள் உள்ளனர். இதன்படி, 172வது வார்டில், கழிவு நீர் உந்து சக்தி நிலையம் அமைக்க பூஜை போடப்பட்டது. அமைச்சர் சுப்பிரமணியன், மேயர், துணை மேயர், மண்டலக்குழு தலைவர் உள்ளிட்டோர், 172வது வார்டு என கூறி இத்திட்டம் குறித்து பேசினர். ஆனால், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர், அமைச்சர் நேரு ஆகியோர், 174வது வார்டு என, பழைய நம்பரை கூறினர். தற்போது, 174வது வார்டு, பெசன்ட்நகர் பகுதியை உள்ளடக்கியது. இத்திட்டம் துவங்கியது, கிண்டியா அல்லது பெசன்ட்நகரிலா என்ற குழப்பம் ஏற்பட்டது. புதிய வார்டு நம்பர், நடைமுறைக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது. பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை தவிர்க்க, மாநகராட்சியை போல், குடிநீர் வாரியமும் புதிய வார்டு நம்பரை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!