dinamalar telegram
Advertisement

செய்தி சில வரிகளில்...

அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரி காமராஜ் நகரிலுள்ள நாகம்மன் கோவிலில், 15ம் ஆண்டு ஆடி மாத நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமியை முன்னிட்டு, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. வரும், 7ல் அம்மனுக்கு கிடாவெட்டி, பொங்கலிட்டு

பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி ஜெகன்நாத்
செய்துள்ளார்.
உண்டியல் காணிக்கை திருட்டு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, அரசம்பட்டி, அம்பேத்கர் காலனி பகுதியிலுள்ள கருமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த காணிக்கையை திருடிச் சென்றனர். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
25 பேருக்கு கண்புரை சிகிச்சை
அரூர்: அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,ல் நடந்த மருத்துவ முகாமில், கண்புரை குறைபாடு உள்ள, 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று அவர்களுக்கு அரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பா.ஜ., ஆலோசனை கூட்டம்
அரூர்: அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட தண்டகுப்பத்தில், பா.ஜ., ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கிளை தலைவர் மானப்பன் தலைமை வகித்தார். இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும்
கட்சியினர் கலந்து கொண்டனர்.


மது விற்ற 97 பேர் கைது

அரூர்: அரூர் சப்-டிவிஷனில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கடந்த, ஜூலை, 1 முதல், 31 வரை, சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக, 97 வழக்குகள் பதிவு செய்து, 26 பெண்கள் உள்பட, 97 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, நான்கு டூவீலர்கள், 2,050 மதுபாட்டில்கள் மற்றும், 250 லிட்டர் ஊறல், 35 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
பள்ளிக்கு ஆர்.ஓ., இயந்திரம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ரோட்டரி மாநகர் சங்கம் சார்பில் கட்டிகானப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளிக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம், கைகழுவும் 'ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பேஷன்' உள்ளிட்டவைகளை ரோட்டரி மாநகர் சங்க தலைவர் கார்த்திக்ராஜா, தலைமையாசிரியர் சேகரிடம் வழங்கினார். இதனால் அப்பள்ளி வளாகத்திலுள்ள உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உட்பட, 1,200 மாணவர்கள் பயனடைவர். ரோட்டரி சங்க செயலாளர் ஆனந்த், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்சர் பைக் திருட்டு
ஓசூர்: ஓசூர் அடுத்த நந்திமங்கலம் அருகே எம்.காரப்பள்ளியை சேர்ந்தவர் லகுமேஷ், 30. சென்ட்ரீங் வேலை செய்து வருகிறார்; கடந்த, 20ல் காலை, பூதிநத்தம் பகுதியிலுள்ள வெங்கடேசப்பா என்பவரது வீட்டின் முன், தன் பல்சர் பைக்கை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. லகுமேஷ் புகார்படி, பாகலுார் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
ஓசூர்: ராயக்கோட்டை அருகே 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கோட சின்னஹள்ளி ஏரி உள்ளது. இதில், 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, காளிபிளவர் மற்றும் கால்நடை தீவன பயிர்களை தனி நபர்கள் சாகுபடி செய்திருந்தனர். இதையறிந்த ராயக்கோட்டை ஆர்.ஐ., சுகுமார் மற்றும் கெலமங்கலம் பி.டி.ஓ., சாந்தலட்சுமி ஆகியோர், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் மற்றும் போலீசார் பாதுகாப்புடன், நேற்று பொக்லைன் வாகனம் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரி இடத்தை மீட்டனர்.
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
ஓசூர்: ஓசூர் சிப்காட் பகுதியிலுள்ள ஏரி பாலத்தின் அடியில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக, சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்திருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்தி புகார்படி, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் மாயம்
ஓசூர்: ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் சதீஷ், 32. கூலித்தொழிலாளி; இவரது மனைவி சித்ரா, 25; கடந்த, 11ல் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அவர் இருக்குமிடம் தெரியாததால், கணவர் சதீஷ் நேற்று முன்தினம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், ராம்நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான சித்ரா மற்றும்
பாலமுருகனை தேடி வருகின்றனர்.
லாரி மோதி தொழிலாளி சாவு
ஓசூர்: சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகா, ஓலப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 43. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் காலை, தளி ரயில்வே கேட் அருகே, டி.வி.எஸ்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றார். அவ்வழியாக வந்த ஈச்சர் லாரி, பைக் பின்னால் மோதியதில் படுகாயமடைந்த முருகேசன், சம்பவ இடத்திலேயே பலியானார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
நிலத்தகராறில் இருவர் கைது
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த
மலைபையூரை சேர்ந்தவர் இந்திரா, 46; அதே பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள், 60. உறவினர்களான இவர்களுக்குள் கடந்த, 10 ஆண்டுகளாக நிலப்பிரச்னை இருந்துள்ளது. கடந்த ஜூலை, 25ல், இருதரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில், இந்திரா புகார்படி மலைபையூரை சேர்ந்த லோகேஷ்குமார் என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர்; மேலும் மூவரை விசாரிக்கின்றனர். அதேபோல பழனியம்மாள் புகார்படி இந்திராவை கைது செய்த, காவேரிப்பட்டணம் போலீசார்
அவரது கணவர் பழனியை விசாரித்து வருகின்றனர்.
கார் மோதி மூதாட்டி பலி
அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்த என்.எஸ்., ரெட்டியூரை சேர்ந்தவர் சின்னபாப்பா, 49. இவர் நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வத்தல்
மலையில் பகுதியில் இருந்து பாண்டிசேரி பதிவு எண் கொண்ட மாருதி சிப்ட் கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னபாப்பாவை அப்பகுதியினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் விபரீத முடிவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கிட்டம்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார், 24; கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதித்த இவர், சிகிச்சை பெற்றும் குணமாகாத விரக்தியில் கடந்த ஜூலை, 25ல் விஷமருந்தி மயங்கினார். அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணை தாக்கியவருக்கு காப்பு
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த துாளிகொட்டாயை சேர்ந்தவர் மாதம்மாள், 30; அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன், 32. உறவினர்களான
இவர்களுக்குள் கடந்த ஐந்தாண்டுகளாக நிலப்பிரச்னை உள்ளது. கடந்த மாதம், 31ல் இவர்களுக்குள் நிலம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாதம்மாளை சரவணன் தாக்கியுள்ளார். புகார்படி, சரவணனை
கந்திக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement