கோவை மாவட்டம் அன்னுாரில், தி.மு.க., அரசை கண்டித்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் சையத் இப்ராஹிம் பங்கேற்று பேசினார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
'அக்னிபத்' தேச பக்தர்களுக்கான திட்டம்; இதில் சேர பல லட்சம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளில், இரண்டு வருட ராணுவ பயிற்சி உள்ளது. இத்திட்டத்தை எதிர்த்த முதல்வர் ஸ்டாலின், தற்போது, 13 ஆயிரம் ஆசிரியர்களை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கிறார்.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது.
தி.மு.க., ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. கடந்த ஆறு மாதங்களில், 60 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.அரசு ஊழியர்களுக்கு முந்தைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவேன் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்தனர். ஆனால், அதை அமல்படுத்த முடியாது என, மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆட்சி விரைவில் துாக்கி எறியப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ., கோவை வடக்கு மாவட்டத் தலைவர் சங்கீதா, விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!