கோவை : ஐ.பி.எஸ்., அதிகாரி போல் நடித்து, கோவை கலெக்டர் புகைப்படத்தை காண்பித்து, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித், 48. இவர், சென்னை மற்றும் கோவையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு, சென்னையில், ஐ.பி.எஸ்., அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்ட, ஆந்திராவை சேர்ந்த ராஜகுரு, 39 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, கோவையில் பான் மசாலாவுடன் விற்பனை செய்யும் 'ஹூக்கா பார்லர்' வகை ஓட்டல் வைக்க, கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் அனுமதி வாங்கி தருவதாக தெரிவித்தார்.
கோவைக்கு வந்த ராஜகுரு, முகேஷ்குமாரிடம், போன் எண் ஒன்றை கொடுத்து, 'இது, கோவை கலெக்டரின் வாட்ஸ் ஆப் எண்; போனில் பேச மாட்டார்' என்று, தன்னுடைய மற்றொரு எண்ணை கொடுத்து, கலெக்டர் சமீரன் என 'சேட்' செய்து, மொத்தம், 6 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகேஷ்குமார், ராஜகுரு மற்றும் உடந்தையாக இருந்த ஸ்ரீதர் என்பவர் மீது, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்களை தேடி வருகின்றனர்.
இவர்களிடம் மேலும் சிலர் பணம் கொடுத்து ஏமாந்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலி ஐ.பி.எஸ்., அதிகாரி சிக்கும்போது தான், இந்த விவகாரத்தில் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து முழு தகவல்களும் தெரியவரும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!