ஜாக்கிரதை! சென்னையில் வேகமெடுக்கிறது கொரோனா தொற்று பரவல்
இந்த செய்தியை கேட்க
சென்னையில், ஜூன் மாதம் முதல் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 1,100 என்ற அளவில் பதிவாகி வருகிறது. மேலும், 6,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் பலர் குணமடைகின்றனர்.
கண்டிப்பு
சிலர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டாலும், அதற்கு பிந்தைய பாதிப்பான நிமோனியா, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு உள்ளிட்டவற்றால் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.சென்னை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களான, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், முககவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.அதேநேரம், சென்னையில் முக கவசம் அணிய வேண்டும் என, அறிவுறுத்தி வந்த சென்னை மாநகராட்சி, தற்போது, அதை கண்டிப்புடன் பின்பற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.பொது இடங்களுக்கு வரும் மக்கள், முககவசம் அணிந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும், மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகளவில் பரவி வருகிறது.
எனவே, பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். குறிப்பாக, வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, முக கவசம் அணிவது குறித்து, பொதுமக்களிடையே மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
எனவே, வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.ஒத்துழைப்புவணிக வளாகம், திரையரங்கங்கள், துணிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவதை, அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு தனிநபரும், கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, வெளியில் செல்லும்போது தவறாமல் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள, மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓ.எம்.ஆரில் பரவல் அதிகரிப்பு
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. கொரோனா முதல் அலையின்போது, இந்த மண்டலம் பாதிப்பில் கடைசி இடத்தில் இருந்தது. கண்ணகிநகரில், ஒன்றரை மாதத்திற்கு பின் தான், முதல் பாதிப்பு தெரிந்தது. தற்போது, தினமும் 80 முதல் 100 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம், கண்ணகிநகர், காரப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியில் பாதிப்பு அதிகமாக பதிவாகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!