dinamalar telegram
Advertisement

கோவை மீன் மார்க்கெட் விவகாரம்:சென்னை ஐகோர்ட்டில் நாறுகிறது

கோவை:உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட்டை இடிக்க தடை விதிக்கக்கோரி தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில், நாளை மறுதினம் (4ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, மாநில நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்படும் மேம்பாலத்தில், ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கான இறங்கு தளம் மீன் மார்க்கெட் முன் முடிகிறது. இதற்காக, அப்பகுதியில் வசிக்கும் துாய்மை பணியாளர்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன. அவர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்படுகிறது.ஒரு பிளாக் கட்டுவதற்கு இட வசதியில்லாததால், மீன் மார்க்கெட் வளாகத்தை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இது, 2009ல், 1.37 கோடி ரூபாய் செலவில், மாநகராட்சியால் கட்டப்பட்டது. 13 ஆண்டுகளே ஆகியிருப்பதால், இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகளில் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையில், 'மீன் மார்க்கெட்டுக்கு செலவழித்த தொகை எவ்வளவு; புகைப்பட ஆதாரங்களை பார்க்கும்போது, நவீன கட்டமைப்புடன் காணப்படுகிறது; ஏன் இடிக்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பை வேறிடத்தில் கட்ட வேண்டியதுதானே' என, பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், விரிவாக பதிலளிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.மாநகராட்சி தரப்பில், 'மேம்பாலம் கட்டுவதால் அணுகுசாலை அமைக்க வேண்டியிருக்கிறது. துாய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு, போதிய இட வசதி இல்லாததால், மார்க்கெட்டை வேறிடத்துக்கு மாற்ற வேண்டியிருக்கிறது' என, பதிலளிக்கப்பட்டுள்ளது.தற்போது உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், புதிதாக மார்க்கெட் கட்டி வரும் மீன் வியாபாரிகள், தாமாக முன்வந்து, புதிய மார்க்கெட் கட்டுவது தொடர்பாக மனு தாக்கல் செய்திருக்கின்றனர். அம்மனுவையும் கோர்ட் விசாரணைக்கு எடுத்திருக்கிறது. அடுத்த கட்ட விசாரணை, நாளை மறுதினம் (4ம் தேதி) நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement