தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை; உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியடைந்தோர் நலச்சங்கம் தலைவர் ஷீலா பிரேம்குமாரி தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு ஜூன் 23ல் உத்தரவிட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதித்துள்ளது. இதற்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்ற குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கவில்லை. பொது அறிவிப்பு செய்யவில்லை. இது சட்டவிரோதம்.தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.
நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.அரசு தரப்பு: நடப்பு கல்வியாண்டிற்கு அவசர சூழ்நிலை கருதி தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தகுதித் தேர்வு தேர்ச்சியடைந்தோர், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நியமன நடைமுறைகள் ஜூலை 15 ல் துவங்குகிறது என தெரிவித்தது.
நீதிபதி: தற்காலிக பணி நியமனமானது மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை. நிரந்தரப் பணியில் ஆசிரியர்களை நியமிக்கலாமே. போதிய தகுதிகள் இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி பாதிக்கும். தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்போது நீதிமன்றத்தை நாடுவர்.வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்காலிக ஆசிரியர்களை நியமித்துவிட்டு குறிப்பிட்ட காலவரம்பிற்கு பின் தங்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் என அவர்கள் உரிமை கோருவர்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை ஜூலை 8க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!