பிளஸ் 2 படித்து முடித்துள்ள மாணவர்கள், உயர் கல்வியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனைகளை அள்ளித்தரும் வழிகாட்டி நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், நாளை கோலாகலமாக துவங்க உள்ளது.வரும் 26ம் தேதி வரை, மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
அதிக சம்பளம்
இந்த நிகழ்ச்சியில், முன்னணி கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று, மாணவர்களின் எதிர்காலம் வளம் பெறுவதற்கான உயர்கல்வி குறித்தஆலோசனைகளை வழங்க உள்ளனர். மருத்துவம், இன்ஜினியரிங், கலை, சட்டம், வேளாண்மை, கணினி அறிவியல், வணிகம், மல்டி மீடியா என, அனைத்து வகை படிப்புகள் குறித்தும், வல்லுனர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
கை நிறைய சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான படிப்புகள் எவை; எதிர்கால வாழ்வை வளமாக்கும் உயர்கல்வி பாட பிரிவுகள் என்ன என விளக்க உள்ளனர். படிக்கும் போதே வளர்க்க வேண்டிய வேலைவாய்ப்பு திறன்கள் என்ன, 'டாப்' கல்வி நிறுவனங்களின் படிப்புகள் என்னென்ன என்பது குறித்து, மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் ஆலோசனை வழங்குவர்.கல்லுாரிகளில் சேர்ந்த பின், வங்கிகளில் எளிதில் கல்விக் கடன் பெறும் முறை குறித்தும், நிபுணர்கள் வழிகாட்ட உள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானி
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர், அறிவியல் தொழில்நுட்ப படிப்புகள் குறித்து ஆலோசனை அளிக்க உள்ளனர்.உயர்கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர் பிரேமானந்த் சேதுராஜன், தைரோகேர் தொழில்நுட்ப நிறுவனர் வேலுமணி, தொழிலதிபர் குமரவேல், ஆடிட்டர் சேகர்.
தொழில் துறை வல்லுனர் செந்தில்ராஜா ஆகியோர், வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க உள்ளனர்.அனைத்து வகை கலை, அறிவியல் படிப்புகள் குறித்து, கல்வியாளர் ரமேஷ் பிரபா; ஆளில்லா விமானமான 'ட்ரோன்'களின் தேவை குறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில் ஆலோசனை வழங்குவர். மேலும், வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு தொடர்பாக, சுஜித்குமார், கல்விக் கடன் குறித்து வங்கியாளர் விருத்தாசலம், அரசு வேலைவாய்ப்பு குறித்து நித்யா ஆகியோரும், ஆலோசனை வழங்குவர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!