காவல் மரணங்கள் இனி கூடாது போலீசாருக்கு டி.ஜி.பி., அறிவுரை
போலீஸ் ஸ்டேஷனில் ஏற்படும் மரணத்தை தடுப்பது குறித்து, திருச்சி துாய வளனார் கல்லுாரியில், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
முகாமை துவக்கி வைத்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு அளித்த பேட்டி: திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 9 சரகங்களில் உள்ள 350 போலீஸ் அதிகாரிகள் முகாமில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்றவர்கள், மற்ற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சென்று பயிற்சியளிப்பர்.
நாடு முழுதும், 10 ஆண்டுகளில், போலீஸ் ஸ்டேஷன்களில் 919 மரணங்கள் நடைபெற்றுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 84 மரணங்கள் அடக்கம். கடந்தாண்டு நான்கு பேர் மட்டுமே இறந்துள்ளனர்.
இந்த ஆண்டு, சென்னையில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட பின் இறந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், 'இனிமேல் போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள் இருக்கக் கூடாது' என, உத்தரவிட்டார்.
அனைவருமே போலீஸ்காரர்கள் தாக்கியதால் இறக்கவில்லை; சிலர் தற்கொலை செய்தும், சிலர் உடல் நலக்குறைவாலும் இறந்து விடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு மனு கொடுக்க வந்தவர் கூட மயங்கி விழுந்து இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுபோன்ற நேரங்களில், போலீசார் உஷாராக செயல்பட வேண்டும். ஒருவர் போலீஸ் காவலுக்கு உட்படுத்தப்பட்டால், பலத்தை பயன்படுத்தாமல், கண்ணியமாகவும், பாதுகாப்புடனும் செயல்பட பயிற்சி அளிக்கப்படுகிறது.
காவலுக்கு உட்படுத்தப்பட்டவர், போலீஸ்காரருடன் வாக்குவாதம் செய்தாலோ, சண்டையிட்டு தாக்கினாலோ, அவரை லத்தியால் தாக்காமல், சாமர்த்தியமாக கைவிலங்கு போட்டு கட்டுப்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.
முன்னாள் போலீஸ் அதிகாரி மோகன் தலைமையிலான கராத்தே, குங்பூ, களரி, வர்மக்கலை பயிற்சியாளர்கள், போலீஸ்காரர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள் முற்றிலும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். போலீசார் தற்காத்துக் கொள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், தேவையில்லாமல் பலத்தை பிரயோகிக்கக் கூடாது. தேவைப்பட்டாலும், தேவைக்கு அதிகமான பலத்தையும் பிரயோகிக்கக் கூடாது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. சில மலைப் பகுதிகளில் இருப்பதையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!