ஆண்டுக்கு பல கோடிக்கு வருவாயை ஈட்டித்தரும் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கழிப்பிடத்துக்கும், குடிநீர் வசதிக்கும், வாகன பார்க்கிங் வசதிக்கும் கடும் சிரமப்படுகின்றனர்.
விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த இடம் தேடி தேடி, கடைசியில் சாலையோரங்களில் நிறுத்துகின்றனர்.இப்படி சாலையோரம் வாகனம் நிறுத்தவும், கட்டண சீட்டை கிழித்துக்கொடுத்து கட்டாய வசூலில் ஈடுபடுகிறது சோமையம்பாளையம் ஊராட்சி.கடந்த ஆண்டு மருதமலை அடிவாரத்திலுள்ள வண்டிப்பேட்டை 21 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. அப்போதே டெம்போ வேனுக்கு பார்க்கிங் கட்டணமாக, 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற ஏலத்தில், ரூ.18 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆனால் அப்போதிருந்து டெம்போ வேனுக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இந்த அநியாய வசூல் குறித்து, சோமையம்பாளையம் ஊராட்சித்தலைவர் ரங்கராஜிடம் கேட்டபோது, ''நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் சமூக வலைதளங்களில் வந்த வீடியோவை பார்த்தேன். இது குறித்து ஏலதாரரை அழைத்து விசாரிக்கிறேன். கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறேன். நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கிறேன்,'' என்றார்.ஊராட்சித்தலைவருக்கு தெரியாமல் இத்தனை நாட்களாக, இந்த அடாவடி வசூல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. பரவாயில்லை...'இப்போது தெரிந்து விட்டது'. நடவடிக்கை எடுக்கிறாரா இல்லையா என பார்ப்போம்.
அடாவடி வசூலில் ஈடுபடும் ஏலதாரரை ரத்து செய்துவிட்டு, ஊராட்சி நிர்வாகமே இதற்கென்று பணியாளர்களை நியமித்து பணிகளை கவனிக்கலாம். இதனால் ஊராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். நியாயமான பார்க்கிங் வசதியை பெற்ற மகிழ்ச்சியில், பக்தர்களும் மன நிம்மதியடைவர். அல்லது இப்பணியை சுயஉதவிக்குழுக்கள் வசமோ, சேவை மனப்பான்மையோடு இயங்கும் அறக்கட்டளை அல்லது அமைப்புகள் வசமோ ஒப்படைக்கலாம்.
ஊராட்சியாவது ஒண்ணாவது வடவள்ளியிலிருந்து காணுவாயிக்கு போற ரோடு, உழுது போட்ட வயக்காடு..அதவிட மோசம்...ரெண்டு பக்கமும் மூக்கை மூடிக்கிட்டு போறமாதிரி குப்பை. இந்த ரோடுலுதான் வடவள்ளிக்கு பள்ளிக்கூடம் போற பிள்ளங்களும் வேலைக்கு போறவங்களும் தெனம் முதுகெலும்பு ஓடிய போறாங்க வராங்க ...அதுக்கே ஒன்னு செய்யில இதையா பாக்க போறாங்க?