ஆதிதிராவிடர் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க தனிப்பிரிவு துவக்க வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உயர்கல்வி வாய்ப்பிற்கு உதவ தனிப்பிரிவு ஏற்படுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை திருமால்புரம் கார்த்திக் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அம்மக்களுக்கு முறையாக சென்றடைவதில்லை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில் பி.எச்.டி., படிப்பதற்கான சிறப்புத் திட்டம் உள்ளது. இதன் கீழ் 2012 முதல் 2020 வரை 18 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதில் 3 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான நிதி ரூ.2 கோடியே 65 லட்சத்து 83 ஆயிரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதம் ரூ.99 லட்சத்தை பயன்படுத்தவில்லை.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 5 ஆண்டுகளில் ஒதுக்கிய நிதியில், ரூ.927 கோடியை செலவிடாமல் அரசு கஜானாவிற்கே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை வன்கொடுமைகளால் பாதித்த அம்மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உயர்கல்வி (பி.எச்.டி.,) வாய்ப்பிற்கு உதவ மாவட்டந்தோறும் தனிப்பிரிவு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கார்த்திக் மனு செய்தார்.
நீதிபதிகள் அப்துல் குத்துாஸ், எஸ்.ஸ்ரீமதி அமர்வு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜூன் 6க்கு ஒத்திவைத்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!