நெல்லையில் நர்ஸ் உடல் ஒப்படைப்பு: முடிவுக்கு வந்தது போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் சின்னத்தம்பி. ஹிந்து முன்னணி நிர்வாகி. இவரது மனைவி முருகலட்சுமி 36. திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன் மூளையில் கட்டி பாதிப்பினால் இறந்தார். அவருக்கு போதிய சிகிச்சையளிக்காமல் டிஸ்சார்ஜ் செய்ததால் இறந்தார். குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
முறையான சிகிச்சை அளிக்காத டாக்டர் குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்டோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி டீன் ரவிச்சந்திரனுடன் பேசினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.இதனிடையே மருத்துவத்துறை இயக்குனர் ராம் பாபு தலைமையில் டாக்டர்கள் மற்றும் டீன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
நர்ஸ் கணவர் சின்ன தம்பிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு தற்காலிக வார்டு மேலாளர் பணி வழங்கப்பட்டது. மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பங்களிப்பில் ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து 6 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. நர்ஸ் உடலை சின்னதம்பி குடும்பத்தினர் பெற்றுச்சென்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!